நாகர்கோவில்: கன்னியாகுமரியை யாசகர்கள் இல்லாத மாவட்டமாக மாற்றும் வகையில் யாசகர்களை கண்டறிந்து கணக்கெடுக்கும் பணி இன்று துவங்கியது.
குமரி மாவட்டத்தை யாசகம் எடுப்பவர்கள் இல்லா மாவட்டமாக்கும் வகையில் திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் துவங்கியுள்ளது. இதன் முதல்கட்டமாக சுற்றுலா தலமான கன்னியாகுமரி பேரூராட்சி பகுதிகளில் யாசகம் எடுப்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கவும், அவர்களை கண்ணியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் வாழ்வதற்கு உறுதி செய்ய கன்னியாகுமரி பகுதியில் கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது.
யாசகம் எடுப்பவர்கள் இல்லா கன்னியாகுமரி பேரூராட்சி உருவாக்கவும், அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கும் வகையில் சுகாதாரம், உணவு, உடை, படுக்கை, மருத்துவ வசதிகள், கவுன்சிலிங், திறன் மேம்பாட்டு பயிற்சி, வேலைவாய்ப்பு மற்றும் கல்வி போன்ற முழு அளவிலான அடிப்படை சேவை வழங்க ‘ஸ்மைல்’ எனப்படும் புன்னகை திட்டம் இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் மற்றும் கன்னியாகுமரி பேரூராட்சி இணைந்து இத்திட்டத்தை செயலாற்ற உள்ளது.
கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமையில் செயல் அலுவலர் ரமாதேவி முன்னிலையில் இந்நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கணக்கெடுப்பு பணியை துவங்கி வைத்து, பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் கூறுகையில்: கன்னியாகுமரி பேரூராட்சி பகுதியில் உள்ள 12 முக்கிய பகுதிகளில் உள்ள பஸ் நிலையம், ரயில் நிலையம், கோயில், தேவாலயம், கடை வீதி, நினைவு இல்ல பகுதிகள், தனியார் வாகன நிறுத்தம், சன்னதி தெரு, ரத வீதிகள் உள்ளிட்ட மக்கள் கூடும் பகுதிகளில் யாசகம் எடுப்பவர்கள் கண்டறிய படவுள்ளனர்.
இந்த கணக்கெடுப்பு பணியில் தன்னார்வலர்கள் 6 குழுக்களாக பிரிந்து பல்வேறு பகுதிகளில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதில் ஆதரவற்றோர், பெண்கள், குழந்தைகள், மனநலம் பாதிக்கப்பட்டோர் என பிரிக்கப்பட்டு, மறுவாழ்வுக்காக வழிவகை செய்வதுடன், திறன் மேம்பாட்டு பயிற்சிகள் கொடுத்து, வேலை வாய்ப்பு ஏற்படுத்த வழிவகை செய்யப்பட உள்ளது.
மேலும், விருப்பம் உள்ளவர்களை அவர்களின் குடும்பத்துடன் சேர்க்கவும், அல்லாதவர்களை காப்பகத்தில் சேர்க்கவும் நடவடிக்கை மேற்கொள்ள பட உள்ளது” என தெரிவித்தார். நிகழ்ச்சியில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் சந்திரகுமார்,பேரூராட்சி உறுப்பினர்கள், மற்றும் தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.