தமிழகத்தில் மலை பிரதேசமான குன்னூரில் மிக குறைந்தபட்சமாக 8.4 டிகிரி செல்சியஸ், நில பகுதியான கரூர் பரமத்தியில் 15.5 டிகிரி செல்சியஸ் என குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது.
தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலையில் லேசான பனிமூட்டம் காணப்படும். நாளை (ஜன.24) முதல் 28-ம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலை காணப்படும்.
தென் தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல், அதை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்று மணிக்கு 35-45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும்.
நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது. வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
மலை பிரதேசங்களான குன்னூரில் 8.4 டிகிரி, கொடைக்கானலில் 9.5 டிகிரி, உதகையில் 10.2 டிகிரி செல்சியஸ் என குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. நில பகுதிகளான கரூர் பரமத்தியில் 15.5 டிகிரி, வேலூரில் 18.2 டிகிரி, திருத்தணியில் 18.5 டிகிரி, சேலத்தில் 18.6 டிகிரி, தருமபுரியில் 19 டிகிரி, கோவையில் 19.1 டிகிரி செல்சியஸ் என குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஊத்து, நாலுமுக்கில் அதிக மழை ஏன்? – கடந்த டிசம்பர் 12-ம் தேதி நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில் 54 செ.மீ., நாலுமுக்கு பகுதியில் 31 செ.மீ. மழை பெய்தது. டிசம்பர் 31, கடந்த ஜனவரி 15, 18-ம் தேதியும் கனமழை பெய்த நிலையில், கடந்த 19-ம் தேதி ஊத்து பகுதியில் 23 செ.மீ. நாலுமுக்கில் 22 செ.மீ. என அதிகனமழை பதிவாகியுள்ளது. இதுகுறித்து கேட்டபோது, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் எஸ்.பாலசந்திரன் கூறியதாவது: இந்த இடங்கள் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ளன. பலமாக வீசும் காற்று, மலையில் மோதி, மேலே விண்ணுக்கு செல்லும் வாய்ப்பு அதிகம். அருகிலேயே கடல் இருப்பதால், மழை மேகம் உருவாவதற்கான ஈரப்பதமும் எளிதில் கிடைக்கும். இதனால்தான் அதிக மழை பதிவாகிறது.