தன்னை நம்பிய மக்களை பிரதமர் மோடி கைவிடமாட்டார்: டங்ஸ்டன் விவகாரத்தில் அண்ணாமலை நம்பிக்கை

டங்ஸ்டன் சுரங்கம் திட்டம் ரத்து அறிவிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என டெல்லியில் அண்ணாமலை தெரிவித்தார்.

மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியில் உள்ள வல்லாளப்பட்டி, அரிட்டாப்பட்டி, கிடாரிப்பட்டி, நரசிங்கம்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் குழுவுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநிலச் செயலாளர் பேராசிரியர் இராம.சீனிவாசன் உள்ளிட்டோர் டெல்லியில் மத்திய சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை நேற்று நேரில் சந்தித்தனர்.

அப்போது மத்திய அமைச்சரிடம், மேலூர் தொகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினர். டங்ஸ்டன் சுரங்கம் திட்டத்தை ரத்து செய்யும் வகையில் சாதகமான முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என அமைச்சர் கிஷன் ரெட்டி விவசாயிகளுக்கு உறுதி அளித்தார்.

சந்திப்பிக்குப்பிறகு, அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் அனைத்து கிராமங்களின் தலைவர்களுடன், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்தோம். டங்ஸ்டன் சுரங்கத்தால் பாதிப்புக்குள்ளாகி உள்ள பகுதிகள் எவை, நீர்நிலைகள், கோயில்கள், சமணப்படுக்கைகள் தொடர்பாக மத்திய அமைச்சரிடம் அவர்கள் எடுத்து கூறினார்கள். டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது தொடர்பாக 2021-ம் ஆண்டு மத்திய அரசு, மாநில அரசுக்கு கடிதம் எழுதிய போதுகூட, மாநில அரசு அதை எதிர்க்கவில்லை.

அதன் பிறகு டெண்டர் அறிவிப்பு வெளியானது. 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு தனியார் நிறுவனம் டெண்டர் எடுத்த பிறகுதான் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனடியாக மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, டெண்டர்கள் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில், தற்போது மத்திய அமைச்சரை சந்தித்து பேசியிருக்கிறோம். டங்ஸ்டன் சுரங்கம் திட்டம் ரத்து செய்யப்படும் என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி உறுதியளித்திருக்கிறார்.

மக்களுக்கு பாஜக கொடுத்த உறுதிமொழியை காப்பாற்றி இருக்கிறது. இதுதொடர்பாக, கிஷன் ரெட்டி, பிரதமர் மோடியை சந்தித்து பேசிய பிறகு, டங்ஸ்டன் சுரங்கம் திட்டம் ரத்து தொடர்பாக ஜன.23-ம் தேதி (இன்று) அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும். பிரதமர் மோடி எப்போதும் விவசாயிகளின் நண்பராகத்தான் இருந்துள்ளார். தன்னை நம்பிய மக்களை பிரதமர் மோடி கைவிடமாட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.