திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சத்யநாராயண மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருமலையில் கடந்த 10-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை சொர்க்க வாசல் திறக்கப்பட்டு அதன் வழியே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதற்காக கடந்த 9-ம்தேதி அதிகாலை 5 மணி முதல் இலவச டோக்கன் வழங்க திருப்பதியில் 8 இடங்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்தது. ஆனால் கடந்த 8-ம் தேதி காலை முதலே பக்தர்கள் டோக்கன் வாங்க திருப்பதியில் குவிந்தனர். இரவு 9.30 மணிக்கு பக்தர்களுக்கு ஒரு வரிசை திறக்கப்பட்டவுடன் அவர்கள் முண்டியடித்துக் கொண்டு சென்றனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த அதிர்ச்சிகர சம்பவம் தொடர்பாக 2 ஐஏஎஸ் அதிகாரிகள், திருப்பதி எஸ்.பி., ஒரு டிஎஸ்பி உட்பட 6 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 4 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர். இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வலியுறுத்தியது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என ஆந்திர அரசு அறிவித்தது.
இந்நிலையில் நெரிசல் சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஆந்திர உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி சத்யநாராயண மூர்த்தியை ஆந்திர அரசு நேற்று நியமனம் செய்துள்ளது. நீதிபதி சத்யநாராயண மூர்த்தி தலைமையிலான குழு திருப்பதில் விரைவில் தனது விசாரணையை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.