சென்னை: சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மீதான கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றம் செய்வோருக்கு அதிகபட்சமாக மரணதண்டனை விதிக்க வகை செய்யும் சட்டமசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில், பெண்ணுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்யும் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா மற்றும் மத்திய அரசு கடந்த 2023-ம் ஆண்டு கொண்டு வந்த பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா (பிஎன்எஸ்எஸ்) ஆகிய சட்டங்களை தமிழகத்துக்கு பொருந்தும் வகையில் திருத்தம் செய்வதற்கான சட்டமசோதா ஆகிய 2 சட்ட மசோதாக்களை தமிழக சட்டபேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். இந்த மசோதாக்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, பின்னர் குரல் வாக்கெடுப்பின் மூலம் கடந்த ஜன.10ம் தேதியன்று நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்ட மசோதாக்கள் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ள ஆளுநர், சட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது இந்த சட்டத்திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கடுமையான நடவடிக்கைகள் உடனடியாக அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது.
தண்டனை விவரங்கள்: டிஜிட்டல் முறை, மின்னணு ரீதியான குற்றங்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் என உள்ளது. இதை, முதல் தண்டனை தீர்ப்பின்பேரில் 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் என நீட்டிக்கப்படும். இரண்டாவது அல்லது தொடர்ச்சியான தண்டனை தீர்ப்பின்போது 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
வன்கொடுமையால் ஏற்படும் மரணங்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.50 ஆயிரம் அபராதமும், மரணம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் செய்யப்படும் வன்கொடுமைகளுக்கு ஆயுள் தண்டனை, ரூ.50 ஆயிரம் அபராதம் என உள்ளது. தற்போது அது முறையே 15 ஆண்டு சிறை தண்டனை, ரூ.2 லட்சம் அபராதம் மற்றும் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் அபராதம் என விதிக்கப்படும்.
கல்வி நிலையங்கள், விடுதி, திரையரங்கு, வணிக வளாகங்கள் போன்ற பொது இடங்களில் போதிய மின்விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். குற்ற சம்பவங்கள் நடந்த 24 மணி நேரத்தில் காவல் நிலையங்களுக்கு தகவல் அளிக்க வேண்டும். புகார் அளிக்காமல் மறைத்தால் விதிக்கப்படும் ரூ.2 ஆயிரம் அபராதம் என்பது ரூ.50 ஆயிரமாக அதிகரிக்கப்படும்.
அதேபோல, வன்கொடுமைக்கு 14 ஆண்டு கடுங்காவல் முதல் அபராதத்துடன் ஆயுட்கால சிறை தண்டனை. காவல் துறை அலுவலர், சிறைச்சாலை அலுவலர், அரசு அலுவலர், மருத்துவமனை பணியாளர் வன்கொடுமை குற்றவாளியாக இருந்தால் 20 ஆண்டு கடுங்காவல் முதல் ஆயுட்கால சிறை தண்டனை. 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை வன்கொடுமை செய்தால் கடுங்காவல் தண்டனை அல்லது மரண தண்டனை. கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தால் அபராதத்துடன் கடுங்காவல் ஆயுள் தண்டனை. 18 வயதுக்கு உட்பட்ட பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தால் கடுங்காவல் ஆயுள் அல்லது மரண தண்டனை. மீண்டும் மீண்டும் குற்ற செயலில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அல்லது கடுங்காவல் ஆயுள் தண்டனை. பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்தினால் அபராதத்துடன் 3 முதல் 5 ஆண்டு வரை சிறை தண்டனை.
பெண்ணின் கண்ணியத்தை அவமதித்தல் அல்லது பலத்தை பயன்படுத்தி தாக்குதல் நடத்தினால் அபராதத்துடன் 3 முதல் 5 ஆண்டு வரை சிறை தண்டனை. பெண்ணை பின்தொடர்ந்தால் அபராதத்துடன் 5 ஆண்டு வரை சிறை தண்டனை. இதே குற்றம் தொடர்ந்தால், அபராதத்துடன் 7 ஆண்டு வரை சிறை தண்டனை. ஆசிட் வீசி கொடுங்காயம் ஏற்படுத்தினால் அபராதத்துடன் கடுங்காவல் ஆயுள் அல்லது மரண தண்டனை. ஆசிட் வீசுவதாக மிரட்டினால் அபராதத்துடன் 10 ஆண்டு முதல் ஆயுட்கால சிறை தண்டனை வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.