டாவோஸ் (ஸ்விட்சர்லாந்து): ஐந்து நாள் உலகப் பொருளாதார மன்ற வருடாந்திரக் கூட்டத்தில் பேசிய பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், செயற்கை நுண்ணறிவு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.
உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திர உச்சிமாநாடு ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வருகிறது. 5 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் 4-ம் நாளான இன்று, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே உள்ளிட்டோர் உரையாற்றினர்.
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தனது சிறப்பு உரையில், “தவறான தகவல்களை பரப்புவது மற்றும் சைபர் துன்புறுத்தல்களை அளிப்பது ஆகியவற்றை ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் தடுக்க சமூக ஊடக நிர்வாகத்தை சீர்திருத்த வேண்டும். டிஜிட்டல் சேவைகள் சட்டத்தை வலுவாக அமல்படுத்த வேண்டும். வெளிப்படைத்தன்மைக்கான ஐரோப்பிய மையத்திற்கான அதிகாரங்களை விரிவுபடுத்த வேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்தின் நன்மதிப்புகள் விற்பனைக்கல்ல. ஐரோப்பாவின் புத்திசாலித்தனமான மனம், இந்த முக்கியமான சவாலை எதிர்கொள்வதை உறுதிசெய்ய சமூக ஊடக அல்காரிதம்கள் குறித்த ஆராய்ச்சிக்கு அதிக நிதியுதவி அளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
உக்ரைனுக்கான ஆதரவை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே வலியுறுத்தினார். அவர் தனது உரையில், “உக்ரைனுக்கான நமது ஆதரவை நாம் அதிகரிக்க வேண்டும்; குறைக்கக் கூடாது. ரஷ்யா வெற்றி பெறவில்லை என்பது மிக முக்கியம். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வெற்றி பெற்றால், அது வட கொரியா மற்றும் சீனாவின் தலைவர்களை ‘பெருமைப்படுத்த’ வழிவகுக்கும்.” என தெரிவித்தார்.
உலகப் பொருளாதார மன்றத்தின் மூன்றாவது நாளில் தெலுங்கானா அரசு, ஆயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. முக்கியமாக, முன்னணி எரிசக்தி நிறுவனமான சன் பெட்ரோ கெமிக்கல்ஸ், நாகர்கர்னூல், மஞ்சேரியல் மற்றும் முலுகு மாவட்டங்களில் நீர் மின் திட்டங்களை உருவாக்க ரூ. 45,500 கோடி முதலீடு செய்ய முன்வந்துள்ளது.
இந்த மாநாட்டில், மகாராஷ்டிரா 54 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (MoU) கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம், ரூ. 15.70 லட்சம் கோடி மதிப்புள்ள முதலீட்டை அது ஈர்த்துள்ளது. இதன்மூலம், மாநிலம் முழுவதும் 15.95 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.