மும்பை: “பிரபல நடிகர் சயீப் அலி கான் உண்மையிலேயே தாக்கப்பட்டாரா அல்லது நடிக்கிறாரா?” என மகாராஷ்டிர அமைச்சர் நிதேஷ் ரானே கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 16-ம் தேதி மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள தனது வீட்டில் சயீப் அலிகான் இருந்தபோது, அதிகாலை நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் அவரை கத்தியால் பலமுறை குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதையடுத்து சயீப் அலிகான், மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் நடிகர் சயீப் அலிகான் செவ்வாய்க்கிழமை பிற்பகல் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்நிலையில், மகாராஷ்டிர அமைச்சர் நிதேஷ் ரானே, பிரபல நடிகர் சயீப் அலி கான் மீதான தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பி எழுப்பியுள்ளார். அதில், “நடிகர் சையீப் அலி கான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு அவரைப் பார்த்தேன். அப்போது அவர் உண்மையிலேயே தாக்கப்பட்டாரா அல்லது நடிக்கிறாரா என்று எனக்கு சந்தேகம் ஏற்படுகிறது. ஷாருக்கான் அல்லது சயீப் அலிகான் போன்றவர்கள் காயப்படும்போதெல்லாம், எல்லோரும் அதைப் பற்றிப் பேசத் தொடங்குகிறார்கள்.
குறிப்பாக, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சி எம்பி சுப்ரியா சுலே மற்றும் தேசியவாத காங்கிரசை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜிதேந்திர அவாத் ஆகியோர் சுஷாந்த் சிங் ராஜ்புத் போன்ற ஓர் இந்து நடிகர் சித்ரவதை செய்யப்பட்டால், யாரும் எதுவும் கேட்க முன்வருவதில்லை. ஆனால், அவர்கள் சில கலைஞர்களைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறார்கள்” என்றார்.