மகாராஷ்டிரா ரயில் விபத்து பலி 13 ஆக அதிகரிப்பு: வதந்தியால் நேர்ந்த துயரம்!

ஜல்கான்: ஜல்கான் ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ள நிலையில், அதில் நான்கு பேர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதோடு, மாநில அரசு மற்றும் ரயில்வே அமைச்சகம் சார்பில் நிவாரணத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கானில் உள்ள பச்சோரா ரயில் நிலையம் அருகே ரயில் பயணிகள் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய பயங்கர விபத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த மாநிலத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஜல்கான் மாவட்டத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஜல்கானில் இருந்து மும்பை நோக்கி சென்ற புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பயணிகள், ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக சந்தேகித்து ரயிலில் இருந்து குதித்தனர். அப்போது சிலர் தண்டவாளத்தில் இறங்கினர்.

இந்த நிலையில், எதிர் திசையில் வந்த கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில், பயணிகள் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் உயிரிழந்தோரின் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்த நிலையில், அதில் நான்கு பேர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் ஒன்பது ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் அடங்குவர். இது குறித்து ஜல்கான் சிவில் மருத்துவமனையின் டீன் கூறும்போது, “இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி நிறைவடைந்தவுடன், இன்று அவர்களின் குடும்பத்தினரிடம் உடல்கள் ஒப்படைக்கப்படும்” என்றார்.

வதந்தியால் நேர்ந்த துயரம்! இச்சம்பவத்தை நேரில் பார்த்த பாபாதீப் ஷோபராம் பாஸ்வான் என்பவர் கூறுகையில், “டீ விற்கும் ஒருவர் ரயிலில் தீப்பிடித்ததாகக் கூறியுள்ளார். அதோடு, அவசரச் சங்கிலியையும் இழுத்தார். இதையடுத்து, ரயிலின் வேகம் குறையத் தொடங்கியது. அப்போது பயணிகள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தீவிர முயற்சியில் இறங்கினர். இதன் தொடர்ச்சியாக, அவர்கள் வெளியே குதிக்கத் தொடங்கினர்” என்று கூறினார். அந்த நபர் ஏன் அத்தகைய வதந்தியைப் பரப்பினார் என்று தெரியவில்லை.

உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம்: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1.5 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000, சிறு காயங்களுக்கு ரூ.5,000 இழப்பீடு வழங்கப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸும் இரங்கல் தெரிவித்துள்ளார். அதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

மோடி, ராகுல் இரங்கல்: ஜல்கானில் நடந்த துயரமான ரயில் விபத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கலைத் தெரிவித்தார். தனது எக்ஸ் பதிவில், “ இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றனர்” என்று பதிவிட்டுள்ளார்.

ஜல்கான் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தனது ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பதிவில், “மகாராஷ்டிராவின் ஜல்கானில் நடந்த கொடூரமான ரயில் விபத்தில் பலர் உயிரிழந்துள்ள மற்றும் காயமடைந்த செய்தி மிகவும் வருத்தத்தையும் துயரத்தையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன்.

காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை கிடைப்பதை அரசாங்கமும் நிர்வாகமும் உறுதி செய்ய வேண்டும். நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் நிர்வாகத்திற்கு உதவுமாறு காங்கிரஸ் தொழிலாளர்களை நான் கேட்டுக்கொள்கிறேன். வதந்திகள் எவ்வாறு பரவின என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.