சென்னை: உலக அளவில் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி சேவை முடங்கியுள்ள காரணத்தால் மில்லியன் கணக்கான பயனர்கள் அந்த சேவையை பயன்படுத்த முடியாமல் தவிப்பு. இந்தச் சிக்கலுக்கு தீர்வு காண தங்கள் தொழில்நுட்ப குழு பணியாற்றி வருவதாக ஓபன் ஏஐ தெரிவித்துள்ளது.
பல்வேறு இணையாதள சேவை முடக்கம் குறித்த தகவல்களை நிகழ் நேரத்தில் வழங்கி வரும் டவுன் டிடெக்டர் தளத்தில் ஆயிரக்கணக்கான பயனர்கள் ரிப்போர்ட் செய்துள்ளனர். சாட்ஜிபிடி வலைதளம் மற்றும் ஏபிஐ சேவையை பயன்படுத்த முடியவில்லை என பயனர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் செயலி வடிவில் சாட்ஜிபிடி-யை மொபைல் போனில் பயன்படுத்த முடிகிறது.
கடந்த 2022-ம் ஆண்டின் இறுதியில் ஓபன் ஏஐ நிறுவனம் சாட்-ஜிபிடி எனும் ஜெனரேட்டிவ் ஏஐ சாட்பாட்டை அறிமுகம் செய்தது. அது டிஜிட்டல் பயனர்கள் மத்தியில் அதீத வரவேற்பைப் பெற்றது. கிட்டத்தட்ட ஜெனரேட்டிவ் ஏஐ பயன்பாடு சார்ந்த புரட்சியை அது ஏற்படுத்தியது. செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட இந்த சாட்பாட் உடன் பயனர்கள் உரையாட முடியும். பயனர்கள் கேட்கின்ற கேள்விகள் அனைத்துக்கும் டெக்ஸ்ட் வழியில் பதில் கொடுக்கும் வல்லமை கொண்டது சாட்ஜிபிடி. கதை, கட்டுரை, கவிதை, கம்ப்யூட்டர் புரோகிராம் என அனைத்தையும் இதில் பெறலாம்.