தமிழ் நிலத்தில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பை உருக்கும் தொழில்நுட்பம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

தமிழகத்தில் கிடைத்த தொல்லியல் மாதிரிகளை அமெரிக்கா, புனே, அகமதாபாத் ஆய்வகங்களில் பகுப்பாய்வு செய்ததில், 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பை உருக்கும் தொழில்நுட்பம் தமிழ் நிலத்தில் அறிமுகமாகிவிட்டது தெரியவந்துள்ளது. தமிழ் நிலப் பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

தமிழக தொல்லியல் துறை சார்பில் ‘இரும்பின் தொன்மை’ எனும் நூல் வெளியீட்டு விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, நூலை வெளியிட்டார். தொடர்ந்து, கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகத்துக்கு காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். கீழடி அகழாய்வு தொடர்பான இணையதளத்தையும் தொடங்கி வைத்தார்.

விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி நமது தமிழ்க்குடி’ என்று கூறியபோது, நாம் வெற்றுப் பெருமை பேசுவதாக சிலர் விமர்சித்தனர். தமிழ் சமுதாயத்தில் வந்து புகுந்த இழிவுகளும், அதனால் ஏற்பட்ட தேக்க நிலையும்தான் அதற்கு காரணம். இதை சரிசெய்ய, திருவள்ளுவர், வள்ளலார் தொடங்கி அயோத்திதாச பண்டிதர் வரை பலர் பாடுபட்டனர். பரந்துபட்டு வாழ்ந்த தமிழ் இனத்தின் புதையுண்ட வரலாற்றை மீட்டு, இந்த உலகத்துக்கு அறிவிக்க நமது உழைப்பை செலுத்தி வருகிறோம்.

இந்த விழாவில், தமிழர்களின் தொன்மையை உலகத்துக்கு எடுத்துச் சொல்லும் ஆய்வு பயணம் குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளேன். தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது. தமிழ் நிலத்தில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பை உருக்கும் தொழில்நுட்பம் அறிமுகமாகிவிட்டது. இப்போது தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் மூலம் கிடைக்கப்பெற்ற காலக் கணக்கீடுகள், இரும்பு அறிமுகமான காலத்தை கி.மு. 4000-ம் ஆண்டின் முதற்பகுதிக்கு கொண்டு சென்றுள்ளன.

அதன்படி, தமிழகத்தில் கிடைத்த தொல்லியல் மாதிரிகள் புனே, அகமதாபாத் ஆய்வகங்கள் மற்றும் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் பீட்டா ஆய்வகத்திலும் பகுப்பாய்வு செய்யப்பட்டன. 3 நிறுவனங்களும் ஒரேமாதிரியான முடிவை தந்துள்ளன. தற்போதைய கதிரியக்க மற்றும் ஓஎஸ்எல் காலக் கணக்கீடு பகுப்பாய்வில், கி.மு. 3345-ம் ஆண்டிலேயே தென்னிந்தியாவில் இரும்பு அறிமுகமாகி உள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த பகுப்பாய்வு முடிவுகள் உட்பட முழு விவரங்களையும் தொகுத்து ‘இரும்பின் தொன்மை’ நூல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அகழாய்வு செய்யப்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட உள்ள அகழாய்வுகளும் இந்த கண்டுபிடிப்புகளுக்கு மேலும் வலுசேர்க்கும்.

இந்தியாவின் வரலாறு இனி தமிழகத்தில் இருந்துதான் எழுதப்பட வேண்டும் என்று தொடர்ந்து கூறிவருகிறேன். அதை மெய்ப்பிக்கும் ஆய்வுகளை தமிழக தொல்லியல் துறை தொடர்ச்சியாக செய்து வருகிறது. அதன்படி, தமிழகத்தில் கி.மு. 6-ம் நூற்றாண்டிலேயே நகர, எழுத்து நாகரிகம் தொடங்கிவிட்டது என்பதை கீழடி அகழாய்வு நிரூபித்துள்ளது. அதேபோல, 3,200 ஆண்டுகளுக்கு முன்பு நெல் பயிரிடப்பட்டுள்ளது என்று சிவகளை அகழாய்வு மூலம் தெரியவந்துள்ளது. இத்தகைய அகழாய்வு முடிவுகள் பல்வேறு திருப்புமுனைகளையும் உருவாக்கியுள்ளது. இந்த பெருமையை நமது குழந்தைகளிடம் எடுத்துச் சொல்லி பெருமை கொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, சேகர்பாபு, எ.வ.வேலு, ராஜேந்திரன், மா.சுப்பிரமணியன், சக்கரபாணி, தலைமைச் செயலர் முருகானந்தம், தொல்லியல் துறை ஆணையர் செயலர் உதயச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முதல்வரின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து, தங்கம் தென்னரசு, ரகுபதி, செந்தில் பாலாஜி உள்ளிட்ட அமைச்சர்கள் தங்களது வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.