சென்னை: குடியரசு தின விழாவையொட்டி சென்னையில் 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்க போலீஸார் தடை விதித்துள்ளனர். நாடு முழுவதும் 76-வது குடியரசு தின விழா ஜன.26-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் சென்னையில் குடியரசு தின விழா மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகில் கொண்டாடப்பட உள்ளது. இதில் தமிழக ஆளுநர், முதல்வர் கலந்து கொள்ள உள்ளனர்.
ஏற்கெனவே, 2023-ம் ஆண்டு பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா பிரிவு 163-ன் கீழ் கடந்த டிச.26-ம் முதல் பிப்.23-ம் தேதி வரை சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ட்ரோன்கள், ரிமோட் மூலம் இயக்கப்படும் மைக்ரோலைட் ஏர்கிராப்ட், பாரா கிளைடர்ஸ், பாரா மோட்டார்ஸ், ஹேண்ட் கிளைடர்ஸ், ஹாட் ஏர் பலூன்கள் போன்றவை பறக்க விட தடை செய்யப்பட்ட ஆணை நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில், குடியரசு தின விழா பாதுகாப்பு நடவடிக்கைக்காக, சென்னையில் ஜன.25, 26-ம் தேதி ஆகிய 2 நாட்கள், மெரினா கடற்கரையில் அமைந்துள்ள உழைப்பாளர் சிலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், ராஜ் பவன் முதல் மெரினா கடற்கரை வரை, முதல்வர் ஸ்டாலின் வீடு முதல் மெரினா கடற்கரை வரை செல்லும் வழிதடங்களை போலீஸார் சிவப்பு மண்டலமாக அறிவித்து, அந்த பகுதிகளில் ட்ரோன் உள்ளிட்ட எந்த வித பொருட்களும் பறக்கவிட தடைவிதித்துள்ளனர்.