மும்பை, காஞ்சூர் மார்க் பகுதியில் உள்ள மெட்ரோ கார் ஷெட் அருகில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கிடந்தது. அதை மீட்டு போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வந்தனர். ஆரம்பத்தில் விபத்து மரணம் என்று போலீஸார் வழக்குபதிவு செய்தனர். ஆனால் பிரேத பரிசோதனையில் அந்த நபரின் உடலில் பல காயங்கள் இருந்தன. இதையடுத்து அவர் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது குறித்து போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வந்தனர். கொலை செய்யப்பட்ட நபர் பெயர் ராஜேஷ் என்று தெரியவந்தது. அவர் சகாலா ரோடு பகுதியைச் சேர்ந்தவர் என்றும் விசாரணையில் தெரியவந்தது. உடல் கிடந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, அங்கு கொண்டு வந்து உடலை போட்ட நபர் அடையாளம் காணப்பட்டு, ரோஹித் மற்றும் சாகர் ஆகிய இரண்டு பேரைக் கைதுசெய்தனர்.
அவர்கள் இருவரிடமும் விசாரித்தபோது ராஜேஷை கொலைசெய்ய அவர்கள் இரண்டு பேரையும் விஜய் என்பவர் நியமித்தது தெரியவந்தது. இரண்டு பேருக்கும் தலா ரூ.50 ஆயிரம் கொடுத்து ராஜேஷ் சகோதரர் விஜய் நியமித்தது தெரியவந்தது. இதையடுத்து விஜய்யை போலீஸார் கைதுசெய்தனர். விஜய்யிடம் விசாரித்தபோது ராஜேஷ் மது பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து தாயாரை அடித்து சித்ரவதை செய்து வந்ததும் தெரியவந்தது. அதோடு ராஜேஷ் விஜய்யின் மனைவியிடமும் குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்து வந்ததால், அவரது மனைவி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டதும் தெரியவந்தது.
கொலைசெய்யப்படுவதற்கு முந்தைய நாள் ராஜேஷ் உள்ளூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். குடிபோதையில் வந்து கலந்து கொண்டு தகராறில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதனால் கோபமடைந்த விஜய், கூலிப்படையைச் சேர்ந்த சாகர் மற்றும் ரோஹித் ஆகியோருக்குப் பணம் கொடுத்து விஜய்யைக் கொலைசெய்துவிடும்படி தெரிவித்துள்ளார். அவர்கள் இரண்டு பேரும் ராஜேஷை தனியாக அழைத்துச் சென்று அடித்துக் கொலைசெய்து, உடலை மெட்ரோ கார் ஷெட் அருகில் போட்டது விசாரணையில் தெரியவந்தது.