ஈரோடு: எதிர்கட்சிகள் புறக்கணிப்பால், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் களை இழந்து காணப்படுகிறது. நாம் தமிழர் வேட்பாளரை ஆதரித்து இன்று (வெள்ளிக்கிழமை) முதல் சீமான் பரப்புரையைத் தொடங்க உள்ளதால் தேர்தல் களத்தில் அனல் பறக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து, பிப்ரவரி 5-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அதிமுக, பாஜக, தவெக உள்ளிட்ட கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்த நிலையில், திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமாருக்கும், நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவர் தவிர 44 சுயேட்சை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
திக்குமுக்காடிய வாக்காளர்கள்: திருமகன் ஈவெரா மறைவை அடுத்து 2023-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் அதிமுக, தேமுதிக போன்றவை போட்டியிட்டன. இதனால், திமுக சார்பில் 20-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டு, தேர்தல் பணியாற்றினர். அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் படை தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டது. இருவரும் சேர்ந்து, பணம், பரிசுப்பொருட்கள், அசைவ விருந்து என வாக்காளர்களை திக்கு முக்காட வைத்தனர். முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, கனிமொழி மற்றும் இபிஎஸ், அண்ணாமலை ,பிரேமலதா என ஈரோடு கிழக்கில் தலைவர்கள் பிரச்சாரம் களைகட்டியது. தேர்தல் முடிவில், ஈவிகேஎஸ் இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்த முறை எதிர்கட்சிகளின் தேர்தல் புறக்கணிப்பால், ஈரோடு தேர்தல் களம் வெறிச்சோடிக் காணப்படுகிறது. கடந்த தேர்தலைப் போல் அமைச்சர் படை களமிறக்கப்படவில்லை. வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி மற்றும் நிர்வாகிகள், வேட்பாளர் சந்திரகுமாருடன் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும் பணி மட்டும் நடந்து வருகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் மாநகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டுகள் இருக்கும் நிலையில் அவற்றில், 20-க்கும் மேற்பட்ட வார்டுகளில் திமுகவினர் முதற்கட்ட பிரச்சாரத்தை முடித்துள்ளனர்.தொகுதியில் ஏற்கெனவே எம்.எல்.ஏ.வாக இருந்தவர் என்ற அடிப்படையில், தொகுதி முழுவதும் அறிந்த முகமாக சந்திரகுமார் விளங்குகிறார். குடிநீர், சாலைவசதி, வீட்டுமனை பட்டா என பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என வாக்காளர்கள் குரல் எழுப்பும் நிகழ்வுகளும் நடந்து வருகின்றன.
தனித்தன்மையுடன் பிரச்சாரம்: நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி, விரல் விட்டு எண்ணக்கூடிய சிலருடன், தொடர்ந் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அனுமதி இன்றி பிரச்சாரம் மேற்கொண்டதாக அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும், தனித்தன்மையுடன் அவர் தனது எளிமையான பிரச்சாரத்தை தொடர்ந்து வருகிறார். பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நாம் தமிழர் வேட்பாளர் மேற்கொள்ளும் பிரச்சாரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. வேட்புமனு தாக்கலுக்கு வந்த சுயேட்சை வேட்பாளர்கள், அதன்பின் பிரச்சாரக் களத்திற்கு வராமல் அமைதியாகி உள்ளனர்.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று முதல் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார். கடந்த சில நாட்களாக பெரியார் குறித்து அவர் வைத்து வரும் கடுமையான விமர்சனங்கள், அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
சீமானின் வியூகம் என்ன? இந்த நிலையில் பெரியார் பிறந்த ஈரோடு மண்ணில் நடக்கும் இடைத்தேர்தலில், பெரியாரை மையப்படுத்தியே தனது பிரச்சாரத்தை முன் வைக்க சீமான் தயாராகி உள்ளார். பெரியார் சொன்ன கருத்துகளை சொல்லி பிரச்சாரம் செய்யத் தயாரா என்று திமுகவிற்கு அவர் எழுப்பிய கேள்விக்கு இன்று வரை பதில் வரவில்லை.
இந்த நிலையில், ஆளுங்கட்சி ஆதரவுடன் சில தமிழ் அமைப்பின் நிர்வாகிகள் சுயேட்சையாக களமிறக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சீமான் மீதான விமர்சனங்களை முன்வைக்க கூர் தீட்டப்பட்டு வருகின்றனர். அதோடு, சீமான் பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சில அமைப்பினர் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளனர்.
திமுகவைப் பொறுத்தவரை சீமானின் பிரச்சாரத்திற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கோடு இதுவரை எதிர்வினை ஆற்றவில்லை. இந்த நிலையில், இன்று மாலை 4 மணிக்கு ஈரோடு கிழக்கில் பிரச்சாரம் தொடங்கும் சீமான், பெரியார் மீதான விமர்சனத்தை முன் வைப்பாரா அல்லது அரசின் நிர்வாக சீர்கேடுகள், ஊழல் குற்றச்சாட்டுகள், தொகுதி பிரச்சினைகளை முன்வைத்து தனது பிரச்சார வியூகத்தை அமைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று (24-ம் தேதி) இன்றைய பிரச்சாரம் ரத்து செய்யப்படுவதாக திமுக அறிவித்துள்ளது.
துணை ராணுவம் வருகை: கடந்த 2023-ம் ஆண்டு ஈரோடு கிழக்கில் நடந்த இடைத்தேர்தலில் அருந்ததியர் குறித்து சீமான் தெரிவித்த கருத்து சர்ச்சையானது.
இதனால், நாம் தமிழர் கட்சியினருக்கும், அருந்ததிய அமைப்பினர் மற்றும் திமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தற்போது மீண்டும் அத்தகைய சூழல் ஏற்பட வாய்ப்புள்ளதால், ஈரோடு கிழக்கில் துணை ராணுவப்படையினர் உட்பட பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துணை ராணுவப்படையினர் மற்றும் போலீஸார் கொடி அணிவகுப்பு நடத்தியுள்ளனர்.