Gold: 'மோதிரம் காணலை…' – நகை அடமான கடையில் மோசடி! – தீர்வு என்ன?

‘ஒரு பொட்டு தங்கமாவது இருக்கணும்…வாங்கணும்’ என்ற பேச்சை நம் வீடுகளில் அடிக்கடி கேட்டிருப்போம். தங்கத்தை நம் மக்கள் வெறும் அழகுக்காக மட்டுமல்லாமல், அவசரத்தேவைகளுக்கும் பயன்படுத்துவார்கள்.

ஆம்…`ஸ்கூல் பீஸ் கட்ட வேண்டும்… ஆனால், கையில் காசு இல்லையே’, `திடீரென்று ஆஸ்பத்திரி செலவு வந்துருச்சு’, `அவசரமா கொஞ்சம் காசு தேவைப்படுகிறது’ போன்ற சூழ்நிலைகளில் நமக்கு கைகொடுத்து உதவுவது தங்கம்தான். இப்படி நாம் தங்கத்தை அடமானம் வைக்கும்போது பல குளறுபடிகள் நடக்கின்றன. அதைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

தங்க நகை அடமானம் கவனிக்க வேண்டியவை!

மோதிரம் இல்லை…

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, என்னுடைய தோழி ஒருத்தி, தான் அடமானம் வைத்த நகைகளை மீட்கத் தனியார் அடகு நிறுவனத்துக்குச் சென்றிருக்கிறாள். அவள் பணத்தைச் செலுத்தி நகையை மீட்டு வீட்டுக்கு வந்த பிறகுதான் ஒரு மோதிரம் இல்லாததைக் கவனித்திருக்கிறாள். மேலும், அவளுடைய ரசீதிலும் அந்த மோதிரத்தைப் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. இதனால் அந்த தனியார் அடகு நிறுவனத்துக்குச் சென்று ஒரு மோதிரம் காணாததைப் பற்றிக் கூறியிருக்கிறாள். முதலில் மறுத்த அந்த நிறுவனம் பிறகு ஒப்புக்கொண்டுள்ளது. அவளுக்குத் தெரிந்த அதிகாரிகளை வைத்துப் பேசியதால் சீக்கிரமே அவளுக்கு அந்த மோதிரம் கிடைத்துவிட்டது.

இந்த சம்பவம் நமக்கு நடந்தால் என்ன ஆகும்? நம் அனைவருக்குமே பெரிய பெரிய அதிகாரிகளைத் தெரியும் என்பதில்லை. மேலும், என் தோழிக்குக் கிடைத்த மாதிரி சீக்கிரமே தங்கம் கிடைத்துவிடும் என்பதும் இல்லை. இதனால் தங்கம் அடமானம் வைக்கும்போதும், மீட்கும்போதும் நாம்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

அதற்கான டிப்ஸ்கள் இதோ…

  • தங்கத்தை அடமானம் வைக்க எடுத்துச் செல்வதற்கு முன்பாக, அடமானம் வைக்கும் நகைகளை போட்டோ எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

  • அடுத்ததாக என்னென்ன நகையை அடமானம் வைக்கிறோம்? என்பதைத் தனியாக எழுதி வையுங்கள். மேலும் நகைகளை எடை போட்டு அதையும் குறித்துக்கொள்ளுங்கள்.

  • நகைகளை அடமானம் வைத்த பிறகு கொடுக்கப்படும் ரசீதில், நகைகள் சரியாகக் குறிப்பிட்டிருக்கிறார்களா? என்பதைச் சரி பார்த்துக்கொள்ளுங்கள்.

  • நகைகளை மீட்கும்போது ரசீதில் குறிப்பிட்டிருக்கும் அனைத்து நகைகளும் இருக்கின்றதா? என்பதைப் பார்த்துக்கொள்ளுங்கள். எடையையும் சரி பார்த்துக்கொள்ளுங்கள்.

ஜெம் & ஜுவல்லரி டெக்னாலஜி டிரைனிங் சென்டரின் இயக்குநர் கே.சுவாமிநாதன்

நகையை எங்கு அடகு வைக்கலாம்?!

அது சரி… நகைகளை எங்கே அடகு வைக்கலாம்? என்பது தானே உங்களுடைய அடுத்த கேள்வி. அதற்கான பதிலை ஈரோட்டிலுள்ள ஜெம் & ஜுவல்லரி டெக்னாலஜி டிரைனிங் சென்டரின் இயக்குநர் கே.சுவாமிநாதன் விளக்குகிறார்…

“தனியார் அடகு நிறுவனங்களில் நகைகளை அடகு வைக்கும்போது, அந்த நிறுவனம் அரசாங்கத்தில் பதிவு செய்துள்ளதா? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஒருவேளை அடகு கடையில் நகையை அடமானம் வைக்க போகிறீர்களா? அந்த கடை வருவாய் துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். என்ன தான் சரிபார்த்தாலும், இரவோடு இரவாக காலியாகும் பல அடகுக் கடைகள் பற்றியும், சில அடகு நிறுவனங்கள் பற்றியும் கேள்விப்பட்டிருப்போம்.

தங்க நகை

எந்த வங்கி?!

அதனால் நகை அடமானம் பொறுத்தவரையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளே சிறந்தது. இந்த வங்கிகளில் வட்டி குறைவு, பாதுகாப்பு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. வங்கிகளில் அடமானம் வைத்திருந்தால் ஏலத்தின் கடைசி நிமிடங்களில் கூட நகைகளை திருப்பிக்கொள்ள முடியும். ஆனால் தனியார் அடகு நிறுவனங்களில் அது சாத்தியம் இல்லை. வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டிருக்கும் நகைகளுக்கு சீல் வைக்கப்பட்டிருக்கும். அதனால் இந்த நகைகள் மாறி போகவும் வாய்பில்லை…காணாமல் போகவும் வாய்ப்பில்லை. ஆனால் தனியார் அடகு நிறுவனங்களில் பெரும்பாலும் ஜிப் லாக் கவர்களே பயன்படுத்தப்படுகிறது.

இவ்வளவு ப்ளஸ்கள் இருந்தும், பெரும்பாலும் மக்கள் வங்கிகளை விட, தனியார் நிறுவனங்களை தேர்ந்தெடுப்பதற்கு காரணம் அதிக பணம் மற்றும் குறைவான நேரம். ஆனால் மக்கள் அதிக பணம் என்பதைவிட அதிக வட்டி என்பதை உணர வேண்டும். குறைவான நேரம் என்பதைவிட பாதுகாப்பு அதிகம் என்பதை மனதில் கொள்ள வேண்டும்” என்று கூறுகிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.