வாஷிங்டன்: வட கொரிய அதிபர் கிம்மை மீண்டும் சந்திக்கும் திட்டம் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவின் பிரபல செய்தி ஊடகத்துக்கு ட்ரம்ப் அளித்த பிரத்யேகப் பேட்டியில் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் வட கொரியா பற்றிப் பேசுகையில் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை தான் இரண்டு முறை சந்தித்ததை நினைவு கூர்ந்தார். கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டு ட்ரம்ப் வட கொரிய அதிபர் கிம்மை சந்தித்தார். அப்போது கிம்முடனான சந்திப்புகள் எல்லாமே சுமுகமாக நிகழ்ந்ததாக கூறிய ட்ரம்ப், மீண்டும் கிம்மை சந்திக்கும் திட்டம் இருப்பதாகக் கூறினார். மேலும், “கிம் மதவெறியர் அல்ல அவர் ஒரு புத்திசாலியான நபர்.” என்று ட்ரம்ப் பாராட்டினார்.
ட்ரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் கிம்மை 3 முறை சந்தித்தார். அமெரிக்க அதிபர் – வட கொரிய அதிபர் சந்திப்பு வரலாற்றிலேயே முதன்முறையாக ட்ரம்ப் காலத்தில்தான் நிகழ்ந்தது என்பது நினைவுகூரத்தக்கது.
வடகொரியா அமெரிக்காவையும், தென் கொரியாவையும் தன் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதுகிறது. அதனாலேயே தொடர்ந்து பல்வேறு ஆயுத சோதனைகளை நடத்துகிறது. வட கொரியாவும் ரஷ்யாவும் நட்பு நாடுகள். வட கொரியா நிகழ்த்தும் அணு ஆயுதச் சோதனைகள் உலகளவில் கண்டனக் குரல்களைப் பெற்றாலும் ரஷ்யா அதனை விமர்சிப்பதில்லை. இந்நிலையில் தான் மீண்டும் வட கொரிய அதிபரை சந்திக்கும் திட்டம் இருப்பதாகக் கூறியுள்ளார் ட்ரம்ப்.
அதேபோல், ரஷ்ய அதிபருடன் அணு ஆயுதங்கள ஒழிப்பு தொடர்பாக ஒப்பந்தம் போட்டிருப்பேன். ஆனால் அதற்குள் 2020 தேர்தல் வந்து அதில் மோசமான ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது என்றும் ட்ரம்ப் அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.
சீனாவுடனான உறவு குறித்துப் பேசுகையில், “நானும் சீன அதிபர் ஜிஜின்பிங்கும் அண்மையில் பேசிக் கொண்டோம். அது நல்லமுறையில், நட்பு ரீதியில் அமைந்தது. சீனா ஓர் லட்சிய தேசம். ஜின்பிங் ஒரு லட்சியத் தலைவர். கரோனா காலத்துக்கு முன்னர் எங்களுக்குள் மிக நல்ல உறவு இருந்தது. சீனா அமெரிக்காவினால் நிறைய சம்பாதிக்கிறது. அதன் மூலம் அது தனது ராணுவத்தைக் கட்டமைக்கிறது. ஆனால் சீனா மீது அமெரிக்காவுக்கு மிகப்பெரிய அதிகாரம் ஒன்று இருக்கிறது. அதுதான் வரி விதிக்கும் அதிகாரம். சீனா அதிக வரி விதிப்புக்கு உள்ளாக விரும்பவில்லை. நானும் கூட அதிக வரியை சுமத்த விரும்பவில்லை. ஆனால் டாலருக்கு மாற்றான நாணயத்தை நோக்கி சீனா உள்ளிட்ட நாடுகள் நகர முயற்சித்தால் கூடுதல் வரி பாய்வது நிச்சயம்” என்றார்.