புதுடெல்லி: பாதுகாப்பு, வர்த்தக உறவுகளை அதிகரிக்க இந்தியாவும் இந்தோனேசியாவும் முடிவு செய்துள்ளன.
குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இந்தோனேஷிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பு இரு தலைவர்களுக்கு இடையேயான தனிப்பட்ட சந்திப்பாகவும், பின்னர் இரு நாடுகளின் உயர் மட்டக் குழுக்கள் இடையேயான சந்திப்பாகவும் இருந்தது.
இந்த சந்திப்புகளின்போது, இந்தியாவும் இந்தோனேசியாவும் ஒட்டுமொத்த இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகத்தை அளிக்க ஒப்புக்கொண்டன. குறிப்பாக பாதுகாப்பு மற்றும் வர்த்தக துறைகளில் கூட்டாகச் செயல்பட ஒப்புக்கொண்டன.
பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இரு தலைவர்களும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “10 நாடுகளைக் கொண்ட ஆசியான் கூட்டமைப்பிலும், இந்தோ-பசிபிக் பகுதியிலும் இந்தியாவின் “முக்கியமான கூட்டாளி” இந்தோனேசியா. பிராந்தியத்தில் விதிகள் அடிப்படையிலான ஒழுங்கிற்கு இரு நாடுகளும் உறுதிபூண்டுள்ளன.
சர்வதேச சட்டத்தின்படி கப்பல் போக்குவரத்து சுதந்திரம் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். எங்கள் இருதரப்பு உறவுகளின் பல்வேறு அம்சங்கள் குறித்து நாங்கள் விரிவான விவாதங்களை நடத்தினோம். இந்தியாவும் இந்தோனேசியாவும் பாதுகாப்பு உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலிகளில் கூட்டாகச் செயல்பட ஒப்புக்கொண்டன.
கடல்சார் பாதுகாப்புத் துறையில் இந்தியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையே இன்று (சனிக்கிழமை) கையெழுத்தான ஒப்பந்தம், குற்றத் தடுப்பு, தேடுதல், மீட்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும்.
ஒட்டுமொத்த பொருளாதார உறவுகளை அதிகரிக்க வர்த்தகம் மற்றும் சந்தை அணுகலை பன்முகப்படுத்துவது குறித்து இரு தரப்பினரும் பேசினோம். நிதி தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, இணையம் மற்றும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம்” என தெரிவித்தார்.
பிரதமர் மோடி உடனான தனது சந்திப்பு குறித்துப் பேசிய இந்தோனேசிய அதிபர், “பேச்சுவார்த்தைகள் மிகவும் வெளிப்படையாக இருந்தன. வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, சுகாதாரம், எரிசக்தி, பாதுகாப்பு, ஒத்துழைப்பு, டிஜிட்டல், AI, IT மற்றும் எரிசக்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த நாங்கள் ஒப்புக்கொண்டோம்.
இந்திய தொழில்துறை தலைவர்களுடன் வெற்றிகரமான கலந்துரையாடல்களை நடத்தியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பிரதமர் மோடியின் உதவிக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். உங்கள் திட்டங்களை நாங்கள் படிக்கிறோம், தொழில்நுட்ப குழுக்களை அனுப்புகிறோம். இப்போது நாங்கள் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம், அவை எங்களுக்கு நல்ல எடுத்துக்காட்டுகளாக உள்ளன. இந்தியாவுடனான பொருளாதார உறவை விரிவுபடுத்த வேண்டும் என்று எங்கள் அதிகாரிகளுக்கு நான் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளேன்” என்று தெரிவித்தார்.