காஞ்சிபுரம்: தேவரியம்பாக்கம் கிராமத்தில் 900 ஆண்டுகள் பழமையான அரிய புத்தர் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெருமாள் கோயிலில் இருந்த இந்த சிலை 900 ஆண்டு பழமையானது என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வாலாஜாபாத் அருகே உள்ள தேவரியம்பாக்கத்தில் வெண்மை நிற பளிங்குக் கல்லால் ஆன அமர்ந்த நிலையில் உள்ள புத்தரின் சிலை பெருமாள் கோயிலில் பழைய பொருட்கள் ஓரம் கட்டி வைக்கப்பட்ட இடத்தில் இருந்தது.
இந்தச் சிலையில் உள்ள புத்தரின் கண்கள் மூடிய நிலையில்தியானத்தில் உள்ளவாறு அமைக்கப்பட்டிருந்தன.ஓரடி உயரமுள்ள இச்சிலையில் காதுகள் இரண்டும்தோள்வரை நீண்டுள்ளன. மூக்கு சற்று சேதமடைந்த நிலையிலும் சுருள் சுருளான தலைமுடியுடனும், இடப்புறத் தோள்பட்டை முதல் இடுப்பு வரை ஆடையுடனும், பின்புற மேலாடை நேர்த்தியாகத் தெரியும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.
உலக அமைதிக்காக.. கிமு 3-ம் நூற்றாண்டில் பல்வேறு போர்களை தொடுத்த பேரரசர் அசோகர் தனது கடைசி போரான கலிங்கத்து போரை நடத்திய பின் போர்களை கைவிட்டு உலக அமைதிக்காக கவுதம புத்தரின் வழியை பின்பற்றினார். உலகெங்கும் புத்த அமைதி கோபுரங்களை நிறுவி உலகில் அமைதியை உருவாக்க முயன்றார்.
அதுபோன்ற இடங்களில் அமைக்கப்படும் சிலையை போல் இந்தச் சிலை இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சிலை 900 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. காலம் கி.பி 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்க வாய்ப்புள்ளது என தொல்லியல் துறை உதவி தொல்லியல் ஆய்வாளர்கள் ரமேஷ், உதவி கல்வெட்டாய்வாளர்கள் நாகராஜன், பிரசன்னா ஆகியோரும் உறுதி செய்தனர்.
புத்தர் சிலை கிடைக்கப்பெற்ற தேவரியம்பாக்கம் பெருமாள் கோயில் 100 ஆண்டுகளுக்கு முன் ஓலைக் குடிசையாக இருந்ததாகவும், அதில் சீனிவாச பெருமாள் புகைப்படத்துடன் இச்சிலையை வைத்து சிலர் வணங்கி வந்ததாகவும் முன்னோர் சொல்லியதாக இந்த கோயில் அருகே வசித்து வரும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.