வேங்கை வயல் வழக்கு: 2-வது நாளாக மக்கள் போராட்டம்; கிராமத்தை சுற்றி சோதனைச்சாவடி, போலீஸார் குவிப்பு!

புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதனைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. அதனால், இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்து விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

வேங்கைவயல்

இந்த சம்பவம் நடைப்பெற்று மூன்றாண்டுகள் தொடங்கியும் இன்னும் குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்யப்படவில்லை என்று நீதிமன்றம் கண்டித்தது. இதற்கிடையில், 40 – க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை, டி.என்.ஏ பரிசோதனை என பல்வேறு வகைகளில் விசாரணை நடத்தப்பட்டது. அதோடு, பலரிடமும் குரல் மாதிரி சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் மூன்று பேர்கள் ஈடுப்பட்டதாக புதுக்கோட்டை நீதிமன்றத்தில் கடந்த 20 – ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பதாக தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, கம்னியூஸ்ட் தலைவர்கள் உள்ளிட்டோர், ‘இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சூழலில், வேங்கைவயல் கிராமத்திலும், புதுக்கோட்டையிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று போராட்டம் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட, பாதுகாப்புக்காக ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.

வேங்கைவயல்

மற்றொருபுறம், ‘பாதிக்கப்பட்ட எங்களில் மூன்று பேரை குற்றவாளியாக்குவதா?’ என்று வேங்கைவயலைச் சேர்ந்த மக்கள் ஊரிலேயே அமர்ந்து உண்ணாவிரதம் போராட்டத்தில் குதித்தனர். இதனால், ஊருக்கு முகப்பிலேயே நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான போலீஸார், பேரிகாட் அமைத்து செய்தியாளர்களை உள்ளே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர்.

இந்தச் சூழலில், வேங்கைவயலில் மக்கள் உள்ளிருப்பு உண்ணாநிலை அறப்போராட்டம் நடத்திக்கொண்டிருப்பதை பார்க்கச் சென்று மக்களை சந்தித்து ஆறுதல் கூறி திரும்பி வரும் வழியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளர் இளமதி அசோகன், மேற்கு மாவட்டச் செயலாளர் வெள்ளைநெஞ்சன், புதுக்கோட்டை நகரச் செயலாளர் அண்ணாத்துரை, ஆலங்குடி தொகுதிச் செயலாளர் விஜயபாஸ்கர், கணேசமூர்த்தி ஆகியோரை வேங்கைவயலுக்கும் பூங்குடிக்கும் அருகில் உள்ள பகுதியில் வைத்து காவல்துறை கைது செய்தது.

கைதானவர்கள்

அதோடு, அதேபோல் வேங்கைவயலுக்குள் நுழைய முயன்ற சிறுத்தை சிவா உள்ளிட்ட இருவரை போலீஸார் கைது செய்தனர். இன்னொருபக்கம், புதுக்கோட்டையில் அம்பேத்கர் சிலையிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்த முயன்ற 35 -க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில், வேங்கைவயல் கிராம மக்கள் இரண்டாவது நாளாக குடியரசு தினமான இன்றும் கருப்புக் கொடி ஏந்தி, உண்ணாநிலை அறப்போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அதோடு, தங்களை வெளியில் விடாமலும், தங்களது உறவுக்காரர்கள் உள்ளிட்ட யாரையும் வேங்கைவயல் கிராமத்துக்குள் அனுமதிக்காமலும் காவல்துறையினர் தடுத்து வருவதாகவும் அவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

வேங்கைவயல்

வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிராக வேங்கைவயல் கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருவது, புதுக்கோட்டை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.