சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காணாமல் போன அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் 14 நாட்களுக்கு பிறகு, ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே மீட்கப்பட்டார். இது தொடர்பாக, இரண்டு பெண்களிடம் ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் சஹிராபேகம், இவர் வேலை தேடி கடந்த 12-ம் தேதி 6 வயது, 3 வயது மகன் ஆகிய இரண்டு மகன்களுடன் சென்னை சென்ட்ரலுக்கு வந்து, பயணிகள் காத்திருபோர் இருக்கையில் அமர்ந்திருந்தார். அப்போது, இவரது மூத்த மகன் ஷாகிப் உதின் (6) காணாமல் போனார். இதனால், அதிர்ச்சியடைந்த சஹிராபேகம், ரயில் நிலையத்தின் பல இடங்களில் மகனை தேடினார். இருப்பினும், சிறுவன் கிடைக்காத நிலையில், ரயில்வே போலீஸாரிடம் புகார் தெரிவித்தார்.
புகாரின் பேரில், சென்ட்ரல் ரயில்வே போலீஸார் வழக்குப்பதிந்தனர். தொடர்ந்து, தனிப்படை அமைக்கப்பட்டது. தமிழக ரயில்வே போலீஸார் மற்றும் ஆர்.பி.எஃப் போலீஸார் இணைந்து, சிறுவனை தேடும் முயற்சியில் இறங்கினர். சென்ட்ரல் ரயில்நிலையத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, சிறுவனை சில பெண்கள் வட மாநிலம் புறப்பட்ட ரயிலில் அழைத்துச் செல்வது தெரியவந்தது. அதன் அடிப்படையில், தமிழக ரயில்வே போலீஸார் மற்றும் ஆர்பிஎஃப் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், காணாமல் போன சிறுவன் ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே நசரத்பேட்டையில் இருப்பதாக ரயில்வே போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், சென்ட்ரல் ரயில்வே தனிப்படை போலீஸார் விரைந்து சென்று சிறுவனை மீட்டு, சென்னை சென்ட்ரலுக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து, சஹிராபேகத்துக்கு தகவல் கொடுத்து, அவரை காவல் நிலையம் வரவழைத்து, சிறுவனை போலீஸார் ஒப்படைத்தனர். மேலும், சிறுவனை அழைத்துச் சென்றது தொடர்பாக சரஸ்வதி, சஜ்ஜாவதி ஆகிய இரண்டு பெண்களிடம் ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.