ரஞ்சி கோப்பை: ரெயில்வே அணிக்கு எதிராக களமிறங்கும் விராட் கோலி

புதுடெல்லி,

சமீபத்தில் நடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி தோல்வி கண்டது. இதில் ரோகித் சர்மா, விராட்கோலி உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் சோபிக்கவில்லை. இதன் காரணமாக ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. மேலும் உள்ளூர் போட்டிகளில் வீரர்கள் அனைவரும் விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் வலியுறுத்தினர். இதையடுத்து உடல் தகுதி பிரச்சினை இல்லாத சமயத்தில் உள்ளூர் போட்டிகளில், கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்த வீரர்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ. அறிவுறுத்தியது. இதனால் உள்ளூர் போட்டிகளில் முன்னணி வீரர்கள் விளையாடுகின்றனர் .முன்னணி வீரர்களான ரோகித், ஜடேஜா, சிராஜ், பண்ட் உள்ளிட்ட பல வீரர்கள் கடந்த 23ம் தேதி தொடங்கிய ஆட்டங்களில் விளையாடினர் .

காயம் காரணமாக விராட் கோலி கடந்த 23ம் தேதி தொடங்கிய சவுராஷ்டிராவுக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை

இந்நிலையில் டெல்லி அணியின் அடுத்த லீக் ஆட்டத்தில் (30-ந்தேதி ரெயில்வே அணிக்கு எதிராக) விராட் கோலி விளையாட உள்ளார் . ரெயில்வே அணிக்கு எதிராக விளையாடும் டெல்லி அணியின் வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர் . இதில் விராட் கோலி இடம் பெற்றுள்ளார்.

டெல்லி அணியை வழிநடத்தும் வாய்ப்பு கோலிக்கு வழங்கப்பட்டதாகவும் ஆனால் அவர் மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் கோலி டெல்லி அணி வீரர்களுடன் பயிற்சி செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

விராட் கோலி கடைசியாக 2012-ம் ஆண்டு உத்திரபிரதேசத்துக்கு எதிராக ரஞ்சி போட்டியில் விளையாடி இருந்தார். அதன் பிறகு தற்போதுதான் களமிறங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.