புதுடெல்லி: 76 வது குடியரசு தின கொண்டாட்டத்தில் பங்கேற்ற ராணுவத்தின் பல்வேறு பிரிவுகள் பாசறை திரும்பும் மெல்லிசை நிகழ்வு நாளை (புதன்கிழமை) டெல்லி விஜய் சதுக்கத்தில் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரைசினா மலைகள் மீது சூரியன் மறையும் கம்பீரமான பின்னணியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க விஜய் சதுக்கத்தில் 2025 ஜனவரி 29 அன்று 76 வது குடியரசு தின கொண்டாட்டங்களின் நிறைவைக் குறிக்கும் படைகள் பாசறை திரும்பும் மெல்லிசை நிகழ்வு நடைபெற உள்ளது.
குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஏனைய மத்திய அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட சிறப்பு பார்வையாளர்கள் முன்னிலையில் இந்திய ராணுவம், இந்தியக் கடற்படை, இந்திய விமானப்படை, மத்திய ஆயுதக் காவல் படைகள் ஆகியவற்றின் இசைக்குழுக்கள் ரசிக்கத்தக்க 30 இந்திய பாடல்களை இசைக்கவுள்ளன. “கதம் கதம் பதாயே ஜா என்ற பாடலிசையுடன் தொடங்கி ‘சாரே ஜஹான் சே அச்சா’ என்ற பிரபலமான பாடலுடன் இந்த நிகழ்வு நிறைவடையும்.
விழாவின் முதன்மை நடத்துநராக கமாண்டர் மனோஜ் செபாஸ்டியன் இருப்பார். ஐஏ பேண்ட் நடத்துநராக சுபேதார் மேஜர் (கௌரவ கேப்டன்) பிஷன் பகதூர் இருப்பார். அதே நேரத்தில் எம் அந்தோணி, எம்.சி.பி.ஓ எம்.யு.எஸ் II இந்தியக் கடற்படை இசைக்குழுவின் நடத்துநராகவும், வாரண்ட் அதிகாரி அசோக் குமார் இந்திய விமானப்படை இசைக்குழுவின் நடத்துநராகவும் இருப்பார்கள். மத்திய ஆயுத காவல் படை இசைக்குழுவின் நடத்துநராக தலைமைக் கான்ஸ்டபிள் ஜி.டி மகாஜன் கைலாஷ் மாதவ ராவ் இருப்பார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.