திருநெல்வேலி: உலகம் புறந்தள்ள முடியாத அளவுக்கு கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரும் வளர்ச்சி கண்டுள்ளதாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தார்.
திருநெல்வேலி அருகே தனியார் பொறியியல் கல்லூரி வெள்ளி விழா மற்றும் இந்திய அறிவுசார் அமைப்பின் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அவர் பேசியதாவது:
வீரத்துக்கு பெயர் பெற்ற நெல்லை மண், புண்ணிய பூமியாகும். இங்கு வரும்போதெல்லாம் திருயாத்திரைக்கு வருவதுபோன்ற உணர்வு எனக்குள் எழுகிறது. இந்த மண்ணில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய வ.உ.சி., வாஞ்சிநாதன் போன்ற எண்ணற்ற சுதந்திர போராட்ட தலைவர்களும், வீரர்களும் தோன்றியுள்ளனர். ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதேசி கப்பலை இயக்கி வணிகம் செய்த வ.உ.சி., ஆங்கில ஆட்சியரை சுட்டுக்கொன்று தன்னை மாய்த்துக் கொண்ட இளம் வயது புரட்சியாளர் வாஞ்சிநாதன், தனது பாடல்கள் மூலம் சுதந்திர தாகத்தை நாடு முழுக்க ஏற்படுத்தி மகாகவி பாரதி போன்றோரை இன்றைய தலைமுறையினர் எண்ணிப்பார்க்க வேண்டும். நமது நாட்டின் பாரம்பரியத்தையும், கலாச்சார செழுமையையும் இளைஞர்கள் உணர வேண்டும்.
2047-ம் ஆண்டில் இந்தியா 100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது வளர்ந்த நாடாக உருவாகியிருக்கும். ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்பு உலக பொருளாதாரத்தில் இந்தியா முன்னிலையில் இருந்தது. ஆனால் 2014-ல் உலக பொருளாதாரத்தில் 16-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இப்போது 5-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் 3-வது இடத்தை பிடிக்கவுள்ளது. இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக மாறிக்கொண்டிருக்கிறது.
அறிவுசார் சொத்துகளை உருவாக்குவதில் சர்வதேச அளவில் சீனா 46 சதவீத பங்களிப்பை செய்து வருகிறது. அமெரிக்கா 18 சதவீத பங்களிப்பை அளித்து வருகிறது. 2020 -ம் ஆண்டில் இந்தியாவில் 22 ஆயிரம் அறிவுசார் சொத்துக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது உலக அளவில் 0.5 சதவிகிதம் ஆகும். அடுத்து வந்த 4 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 1 லட்சமாக உயர்ந்திருக்கிறது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், மேம்படுத்தப்பட்ட ரோபோடிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களில் உலகம் முன்னேறி வருகிறது. அதற்கு ஏற்ப நாமும் தொழில்நுட்பத்தில் வளர வேண்டும். நாட்டில் தொழில்நுட்ப புரட்சி வரவேண்டும். காலனி ஆதிக்கத்தால் நமது பாரம்பரியத்தையும் தொழில் வளர்ச்சியையும் இழந்து விட்டோம். 1788-ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் இருந்து இந்தியாவுக்கு வந்திருந்த மெக்காலே தலைமையில் வந்த பேராசிரியர் குழு, இந்துக்களின் பாரம்பரியம், அறிவுசார் சொத்து குறித்த தகவல்களை கண்டறிந்து, சேகரித்து தங்களது நாட்டுக்கு கடத்தியது. நமது அடையாளத்தையும் தனித்தன்மையையும் ஆங்கிலேயர்கள் அழித்துவிட்டனர். நமது தற்சார்பை சிதைத்து விட்டனர்.
அதையெல்லாம் தாண்டி கடந்த 10 ஆண்டுகளாக படிப்படியான முன்னேற்றம் என்றில்லாமல் தாவி குதிக்கும் அளவுக்கான முன்னேற்றத்தை கண்டுள்ளோம். உலகத்திற்கே வெளிச்சம் கொடுக்கும் வகையில் இந்தியாவின் அறிவுசார் சொத்து உள்ளது. பல்வேறு சாவால்களை எதிர்கொண்டுள்ள உலக நாடுகள் பலவும் வெறும் தொழில்நுட்பத்தையும் அறிவியலை மட்டுமே நம்பி இருக்கிறது. ஆனால் இந்தியா உலகத்தையே பாதுகாக்கும் சிந்தனையையும், ஒருங்கிணைந்த வாழும் முறையையும், வளர்ச்சியையும் கொண்டுள்ளது. உலகத்தில் உள்ள அறிவியல் தொழில்நுட்பங்களை ஏற்று கொண்டு வளர்ச்சி அடைய வேண்டும். அப்போதுதான் உலகம் நம்மை திரும்பி பார்க்கும்.
கடந்த 10 ஆண்டுகளில் உலகத்தால் புறக்கணிக்க முடியாத அளவிற்கு இந்தியா அபரிமிதமான வளர்ச்சியை கண்டுள்ளது. கரோனா காலத்தில் தடுப்பூசிகளை கண்டுபிடித்து அதனை பல நாடுகளும் வியாபாரமாக்கின. ஆனால் இந்தியா மற்ற நாடுகளில் உள்ள பொதுமக்களை காப்பாற்றும் அளவிற்கு தடுப்பூசிகளை வழங்கி சேவையாற்றியது.
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மாணவர்களாகிய நீங்கள் உங்களை மாற்றி கொள்ள வேண்டும். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் ஆராய்ச்சிகளுக்கும், புதிய கண்டுபிடிப்புகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. மக்களுடைய பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் நமது தொழில்நுட்ப வளர்ச்சி இருக்க வேண்டும். சவால்களை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்கள் நம்பிக்கையுடன் செயலாற்ற வேண்டும். இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதில் உங்களது பங்களிப்பை வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.