`WCC பற்றி பேசிய நடிகை பார்வதி; கேள்வி எழுப்பிய பாக்கியலட்சுமி’ – பொதுநிகழ்ச்சியில் வாக்குவாதம்!

மலையாள சினிமா டப்பிங் ஆர்ட்டிஸ்ட் பாக்கியலட்சுமி முன்னணி நடிகைகளுக்கு வாய்ஸ் கொடுதுள்ளார். நடிகைகள் ரேவதி, ஊர்வசி, ஷோபனா ஆகியோரின் பல சினிமாக்களில் டப்பிங் வாய்ஸ் கொடுத்தவர் பாக்கியலட்சுமி. தனது மனதில் பட்டதை பொதுவெளியில் தைரியத்துடன் கூறிவிடும் குணம் கொண்டவர். மலையாள சினிமா பெண்கள் கூட்டமைப்பான WCC குறித்து டப்பிங் ஆர்ட்டிஸ்ட் பாக்கிய லட்சுமி அடிக்கடி வெளிப்படையான விமர்சனங்களை முன்வைப்பது வழக்கம்.

இந்த நிலையில் கோழிக்கோட்டில் நடைபெற்ற கேரளா லிட்ரேச்சர் ஃபெஸ்டிவெல் (கே.எல்.எஃப்) நிகழ்ச்சியில் ‘பெண்களும் சினிமாவும் என்ற தலைப்பில் பேசிய நடிகை பார்வதி திருவோத்து, ஹேமா கமிட்டி அறிக்கை குறித்தும். சினிமா துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்தும் விரிவாக பேசினார். அதில் சினிமாவில் உள்ள பெண்கள் கூட்டமைப்பான wcc பற்றி பேசும்போது, “நமக்கு எதையும் வெளிப்படையாக பேசக்கூடிய ஒரு இடம் உண்டு. யாராக இருந்தாலும் சொல்லவேண்டியதை அங்குவந்து சொல்லலாம். விமர்சிப்பவர்களும் அங்கு வரலாம்” என்றார்.

கோழிக்கோட்டில் நடந்த நிகழ்ச்சி

அப்போது பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த டப்பிங் ஆர்ட்டிஸ்ட் பாக்கிய லட்சுமி, “இந்த அமைப்பு இன்னும் அதிக பெண்களுக்கு பாதுகாப்புகொடுக்கும் வகையில் மாறவேண்டும். அவர்களுடன் அமர்ந்து பேச சிறிது நேரம் ஒதுக்க வேண்டும். நிறைய பெண் கலைஞர்களுக்கு WCC-க்கு வருவது எப்படி என தெரியவில்லை. அதுபற்றி ஆலோசிக்க வேண்டும். பெண் கலைஞர்கள் வருகைக்காக WCC ஒருவாசலை திறந்து வைக்கவேண்டும். WCC-க்கு எப்படிச் செல்ல வேண்டும் என சினிமா டெக்னீசியன் உள்ளிட்ட  பல பெண்கள் என்னிடம் கேட்கிறார்கள். இதற்கான தீர்வை நீங்கள் ஏற்படுத்த வேண்டும். நான் இங்குவந்து கருத்துக்களை கேட்டுவிட்டு போகத்தான் வந்தேன். ஆனால் எனது ஆலோசனையை கூறவேண்டும் என தோன்றியதால் பேசினேன்” என்றார்.

டப்பிங் ஆர்ட்டிஸ்ட் பாக்கிய லட்சுமி

பாக்கிய லட்சுமிக்கு பதிலளித்துபேசிய நடிகை பார்வதி திருவோத்து, “நீங்கள் ஏன் WCC உறுப்பினராக ஆகக்கூடாது. உங்களுக்கு என்னை நன்றாக தெரியும். என் மொபைல் எண் கிடைப்பதில் உங்களுக்கு எந்த கஷ்டமும் இல்லை. நீங்கள் ஏன் இந்த அமைப்பில் இணையக்கூடாது” என்றார்.

நடிகை பார்வதி திருவோத்துவின் பதிலுக்கு பார்வையாளர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். அதற்கு பதிலளித்த டப்பிங் ஆர்ட்டிஸ்ட் பாக்கிய லட்சுமி, “பெண்கள் கூட்டமைப்பு தொடங்கிய காலத்திலே நான் இருந்தேன். முதலமைச்சரிடம் ஒரு புகார் அளிப்பதற்காக ஒன்றாக செல்லலாம் என என்னிடம் தெரிவித்தார்கள். அதன்பின்னர் அவர்கள் முதல்வரை சந்தித்ததாக செய்தியில் பார்த்தேன். என்னை ஏன் அழைக்கவில்லை என உங்கள் குரூப்பில் உள்ளவர்களிடம் கேட்டேன். அதற்கு, ‘உங்களை அழைக்க எங்களுடன் உள்ளவர்களுக்கு விருப்பம் இல்லை’ என பதில் சொன்னார்கள். அப்படியானால் நாம் செல்ல வேண்டாம் என கருதினேன். அதையடுத்தே WCC-க்கு நான் வருவதில்லை” என்றார்.

டப்பிங்னார்ட்டிஸ்ட் பாக்கிய லட்சுமி, நடிகை பார்வதி திருவோத்து ஆகியோர் நிகழ்ச்சியில் விவாதித்தில் ஈடுபட்ட சம்பவம் மலையாள சினிமா உலகில் பேசுபொருள் ஆகியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.