Vijay Sethupathi : “பான் கார்டு வலைதளப்பக்கத்தில் தமிழ் சேர்க்க வேண்டும்" – விஜய் சேதுபதி கோரிக்கை

பான் கார்டு விண்ணப்பிக்கும் வலைதளப்பக்கத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தி மட்டும் இருப்பது நிறைய பேருக்கு கடினமாக இருப்பதாகவும், தமிழும் அதில் சேர்க்க வேண்டும் என்றும் நடிகர் விஜய் சேதுபதி கூறியிருக்கிறார்.

மதுரையில் வருமான வரித்துறை சார்பில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய விஜய் சேதுபதி, “அரசிடமிருந்து எதாவது தகவலைத் தெரிந்துகொள்ள யாரைப் பார்க்க வேண்டும் என்பது முன்னாடி பெரிய கஷ்டமாக இருக்கும். இப்போது, அதை நாம் எளிமையாக தெரிந்துகொள்ளும் அளவுக்கு, எல்லோரும் புரிந்துகொள்ளும் அளவுக்கு வெப்சைட் ஆரம்பித்து, பான் கார்டு (PAN Card) எப்படி அப்ளை செய்வது, அதில் இருக்கும் சிக்கல் என்ன, குழந்தைகளுக்குப் புரிகின்ற மாதிரி கார்ட்டூன் வடிவில் கொடுத்திருப்பது நல்ல முன்னெடுப்பு.

vijay sethupathi

ஆனால், பான் கார்டு அப்ளை செய்யவேண்டுமென்றால், அது ஆங்கிலத்திலும், இந்தியிலும்தான் இருக்கிறது. அது இங்க நிறைய பேருக்கு கடினமாக இருக்கும். தமிழிலும் இருந்தால், புரிந்துகொள்வதற்கு வசதியாக இருக்கும். ஏனென்றால், இங்கு என்னென்ன மாற்றங்கள் நிகழ்கிறது, எப்படி இருக்கிறது என்பதை திடீர்னு ஒரு பிரச்னை வரும்போதுதான் தெரிஞ்சிக்றோம். அதைப் பற்றிய விளக்கமும், தெளிவும் நமக்கு புரிகின்ற மொழியில் இருந்தால் நாம் அதில் இன்னும் தெளிவாக இருக்க முடியும் என்று நினைக்கிறன்.

இல்லையென்றால், மறுபடியும் அதைப் பற்றி ஒருவரைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இருக்கும். எனவே, அது நிகழ்ந்தால் நன்றாக இருக்கும். மாற்றபடி இந்த முயற்சி அற்புதமானது. வரி செலுத்துவது மிக முக்கியம். எவ்வளவுக்கு எவ்வளவு நம்முடைய உரிமைக்காக அரசிடம் கோரிக்கை வைக்கின்றோமோ, அதே அளவு வரிசெலுத்துவதும் நம்முடைய கடமை.

விஜய் சேதுபதி

ரொம்ப நாளாக மனதில் இருக்கின்ற ஒரு விஷயம், கஷ்டப்பட்டு சம்பாதித்து வரி கட்டுகிறோம், எதாவது பெனிஃபிட் இருந்தால் நல்லா இருக்கும். இவ்வளவுக்கு மேல் இருந்தால் வரி என்று பிரிவு வைத்திருக்கிறீர்கள். அது மாதிரி, ஒரு காலத்துல நன்றாக சம்பாதித்து, ஒரு கட்டத்தில் வருமானம் இல்லாமல் நிலைமை சரியில்லாமல் போனால், அவர் நல்ல குடிமனாக வரி கட்டியிருந்தால் அவருக்கென்று எதாவது பெனிஃபிட் இருக்கலாம் என்று தோன்றுகிறது. அதையும் கொஞ்சம் கவனத்தில் கொள்ள கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.