இந்திய அணிக்கு தண்ணி காட்டிய பென் டக்கெட்… ஐபிஎல் தொடரில் விளையாடுகிறாரா?

Ben Duckett IPL 2025: ஐந்து டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட இங்கிலாந்து அணி, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலில் டி20 போட்டியில் நடைபெற்று வரும் நிலையில், முதலிரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது. 

யாருமே எதிர்பாராத விதமாக இங்கிலாந்து அணி மூன்றாவது போட்டியில் 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்தின் வெற்றியால் இந்த டி20 தொடர் உயிர்ப்புடன் இருக்கிறது எனலாம். கடைசி இரண்டு போட்டிகளில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் என அனைத்து தரப்பினரிடமும் உள்ளது.

IND vs ENG: சொதப்பிய இந்திய பௌலர்கள்

இந்திய அணி முதலிரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம், இங்கிலாந்து வீரர்களால் இந்தியாவின் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் விக்கெட்டை தாரைவார்த்தது தான். ஆனால், நேற்றைய போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றதற்கு அவர்கள் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக வைத்திருந்த அணுகுமுறைதான் எனலாம். கால்களை நன்கு பயன்படுத்தி ரன்களை குவித்தார்.

இருப்பினும், வருண் சக்கரவர்த்தி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார். ஆனால், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவி பிஷ்னோய் உள்ளிட்டோர் சுமாராக பந்துவீசிய காரணத்தால் இந்தியாவால் வெற்றி கனியை பறிக்க முடியவில்லை. 18ஆவது ஓவரின் முதல் பந்தில் லிவிங்ஸ்டன் ஆட்டமிழந்த நிலையில், அடில் ரஷித் – மார்க் வுட் ஜோடி மீதமுள்ள 17 பந்துகளில் 21 ரன்களை தேற்றினர். இங்கிலாந்தை இந்திய அணியால் ஆல்-அவுட் செய்ய முடியவில்லை. கடைசி விக்கெட்டில் இங்கிலாந்து அடித்த ரன்களே அவர்களுக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தது. 

IND vs ENG: மிரட்டிய பென் டக்கெட்

மேலும், முதலிரண்டு போட்டிகளில் தொடக்க வீரர்களான பில் சால்ட், பென் டெக்கெட் இருவருமே சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். ஆனால், நேற்று பென் டக்கெட் சிறப்பாக விளையாடியதன் காரணமாகவே இங்கிலாந்து அணியால் 172 ரன்கள் என்ற பெரிய இலக்கை நிர்ணயிக்க முடிந்தது. முதல் இரண்டு போட்டிகளில் அர்ஷ்தீப் சிங்கின் பந்துவீச்சில் ஆட்டமிழந்த டக்கெட் நேற்று அர்ஷ்தீப் சிங் இல்லாத காரணத்தால் அதிரடி ஆட்டத்தை கைக்கொண்டார். அதுவும் பவர் பிளே ஓவர்களில் ஷமி, ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை சிறப்பாக விளையாடி பென் டக்கெட் அதிரடியாக ரன்களை குவித்து அரைசதம் அடித்தார்.

IND vs ENG: எந்த அணியில் இருக்கிறார் பென் டக்கெட்?

2024ஆம் ஆண்டு இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போதும் கூட, டி20 பாணியில் சிறப்பாக விளையாடிய பென் டக்கெட் பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார். இந்நிலையில், பென் டக்கெட் ஐபிஎல் தொடரில் எந்த அணிக்காக விளையாட உள்ளார் என பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

பென் டக்கெட் கடந்த மெகா ஏலத்தில் தனது பெயரை ரூ.2 கோடி என்ற அடிப்படை தொகையுடன் பதிவு செய்திருந்தார். ஆனால், அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. ஒருவேளை எந்த அணியிலாவது வெளிநாட்டு வீரர்கள் காயம் ஏற்பட்டு விலகினால் இவரை எடுக்க வாய்ப்புள்ளது. அதற்கு வாய்ப்பில்லை என்றால் அடுத்தாண்டு ஐபிஎல் மினி ஏலத்தில் எந்த அணியாவது எடுத்தால்தான் உண்டு…. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.