பெட்ரோல் ஊற்றி எரித்ததில் சட்டக் கல்லூரி மாணவி காயம்: ரூ.6.75 லட்சம் இழப்பீடு வழங்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை: திருச்சியில் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சட்டக் கல்லூரி மாணவிக்கு ரூ.6.75 லட்சம் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாகையைச் சேர்ந்த சுந்தர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: ‘என் மகள் திருச்சி சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். என் மகளுக்கு தவச்செல்வம் என்பவர் காதல் தொந்தரவு அளித்து வந்துள்ளார். அவர் காதலை ஏற்க என் மகள் மறுத்துவிட்டார். இந்நிலையில் தவச்செல்வம் என் மகள் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்தார். இதில் என் மகளுக்கு 50 சதவீத தீக்காயம் ஏற்பட்டது. நடந்த சம்பவத்துக்காக தமிழ்நாடு பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டு நிதியிலிருந்து ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் மகளுக்கு இடைக்கால இழப்பீடாக ரூ.1.75 லட்சம் வழங்கவும், மாணவியை சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்து மேல் சிகிச்சை வழங்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.வெங்கடேசன் வாதிட்டார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் மகள் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட வழக்கில் திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். மனுதாரருக்கு 41 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே 25 சதவீத இழப்பீடு பெற்றுள்ளார். இன்னும் ரூ.6.75 லட்சம் இழப்பீட்டை அடுத்த நான்கு வாரத்தில் வழங்க வேண்டும்.

இந்த இழப்பீட்டு தொகையை மனுதாரரின் மகள் காயத்துக்கு காரணமானவர்களிடம் இருந்து வசூலித்துக் கொள்ளலாம். கூடுதல் இழப்பீடு கோரி பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உரிமை வழங்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.