மும்பை: பாலிவுட் நடிகர் சயீப் அலி கானை கத்தியால் குத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட 30 வயதான வங்கதேசத்தைச் சேர்ந்தவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்டவரின் போலீஸ் காவலை நீட்டிக்க புதிய காரணங்கள் எதுவும் இல்லாததால் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) உத்தரவிட்டது.
சயீப் அலி கான் தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட வங்கதேசத்தைச் சேர்ந்த முகம்மது ஷரிஃபுல் இஸ்லாம் என்பவரின் போலீஸ் காவல் புதன்கிழமை நிறைவடைந்த நிலையில் போலீஸார் அவரை பாந்த்ரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, ஷரிஃபுல்லிடம் கூடுதல் விசாரணைக்காக அவரின் போலீஸ் காவலை இரண்டு நாட்கள் நீட்டிக்க கோரிக்கை விடுத்தனர்.
அப்போது நீதிபதி, “குற்றஞ்சாட்டப்பட்டவர் ஏற்கனவே 10 நாட்களுக்கும் மேலாக போலீஸ் காவலில் இருந்துள்ளார். விசாரணை நிறைவடைந்து விட்டதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. போலீஸ் காவலை நீட்டிப்பதற்கான புதிய காரணங்கள் எதையும் இந்த நீதிமன்றம் பார்க்கவில்லை. புதிதாக ஏதேனும் தெரியவந்தால், அனுமதிக்கப்பட்ட காலத்துக்குள் போலீஸார் அவரை புதிதாக காவலில் எடுக்கலாம்.” என்று தெரிவித்தார். மேலும் ஷரிஃபுல்லை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கவும் உத்தரவிட்டார்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் 11-வது தளத்தில் உள்ள வீட்டில் ஜன.16-ம் தேதி அதிகாலை நுழைந்த மர்ம நபர் பாலிவுட் நடிகர் சயீப் அலிகானை 6 முறை கத்தியால் குத்திவிட்டு தப்பிவிட்டார். படுகாயம் அடைந்த சயீப் அலிகானை மும்பை லீலாவதி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவர் வீடுதிரும்பியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், வங்க தேசத்தை சேர்ந்த ஷரிபுல் இஸ்லாம் ஷெசாத் என்பவரை தானேவில் போலீஸார் கைது செய்தனர். அவர் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளார். பின்னர் ஷரிபுல் இஸ்லாம் ஷெசாத் என்ற உண்மையான பெயரை மறைத்து பிஜாய் தாஸ் என்று மாற்றிக் கொண்டு சில மாதங்கள் தானே பகுதியில் வசித்துள்ளார் என்று போலீஸார் தெரிவித்திருந்தனர்.