அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் அருகே பயணிகள் விமானமும், ராணுவ ஹெலிகாப்டரும் நடுவானில் மோதி ஆற்றில் விழுந்தன. மீட்பு பணியில் இதுவரை 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
அமெரிக்கன் ஏர்லென்ஸ் நிறுவனத்தில் குறைந்தளவிலான பயணிகள் ஏற்றிச் செல்ல கனடாவைச் சேர்ந்த பம்பார்டியர் நிறுவனத்தின் கனட்ஏர் ரீஜினல் ஜெட் 700 ரக விமானம் பயன்படுத்தப்படுகிறது. இதில் 78 பேர் பயணம் செய்யலாம். இந்த ரக விமானம் அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தின் விச்சிட்டா நகரில் இருந்து 60 பயணிகள் மற்றும் 4 ஊழியர்களுடன், வாஷிங்டன் அருகே உள்ள ரொனால்ட் ரீகன் விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் மாலை புறப்பட்டது.
வாஷிங்டன் நகரை இரவு 9 மணியளவில் நெருங்கிய விமானம் தரையிறங்குவதற்காக 400 அடி உயரத்தில் தாழ்வாக மணிக்கு 140 மைல் வேகத்தில் பறந்து வந்தது. அந்த விமானம் 33-ம் எண் ஓடுபாதையில் தரையிறங்க விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது விர்ஜினியா பகுதியில் உள்ள ஃபோர்ட் பெல்வோயர் ராணுவ தளத்தில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்ட யுஎச்-60 பிளாக்ஹாக் ரக ஹெலிகாப்டர் திடீரென குறுக்கிட்டது.
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் வரும் பாதை அருகே, ராணுவ ஹெலிகாப்டர் பறப்பதை ரேடார் மூலம் அறிந்த விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர், ஹெலிகாப்டர் பைலட்டை தொடர்பு கொண்டு, நீங்கள் பறந்து கொண்டு இருக்கும் இடத்தில் தரையிறங்கும் விமானம் தென்படுகிறதா? என கேட்டுள்ளார். அடுத்த சில நொடிகளில் அந்த விமானத்தை விட்டு விலகிச் செல்லும்படி கூறியுள்ளார். அதற்குள் விமானமும், ஹெலிகாப்டரும் நடுவானில் மோதின. அப்போது வானில் மிகப் பெரிய தீப்பிளம்பு எழும்பியது. விமானத்தின் பாகங்கள் அருகில் உள்ள போடோமாக் ஆற்றில் விழுந்தன. ஹெலிகாப்டரின் பாகங்கள் ஆற்றுக்கு அருகே விழுந்தன. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் அமெரிக்க ராணுவத்தினர் 3 பேர் இருந்தனர்.
இதையடுத்து போடோமாக் ஆற்றில் தீயணைப்பு படையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் மீட்பு பணிகளில் இறங்கினர். அருகில் உள்ள பகுதிகளில் இருந்து ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் கொண்டுவரப்பட்டன. போடோமாக் ஆற்றில் இருந்து இதுவரை 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிருடன் யாரும் மீட்கப்படவில்லை. ஆற்றில் தண்ணீரின் வெப்ப நிலையும் உறையும் நிலையில் இருந்தது. ஆற்றில் நொறுங்கி விழுந்த விமானமும் மீட்கப்பட்டது.
இந்த விமான விபத்து குறித்து அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்பிடம் விவரிக்கப்பட்டது. அவர், ‘‘இது மோசமான விபத்து. இது தடுத்திருக்கப்பட வேண்டும். விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மாக்களை கடவுள் ஆசிர்வதிக்கட்டும்’’ என இரங்கல் தெரிவித்தார்.