ஜனாதிபதி குறித்து காங்கிரஸ் விமர்சனம்… ராஷ்டிரபதி பவன் பரபரப்பு விளக்கம்

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறுகிறது.ஆண்டின் முதல் தொடர் என்பதால், ஜனாதிபதி உரையுடன் இந்த தொடர் தொடங்குவது வழக்கம்.

அந்தவகையில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள 2025-26-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாளை (சனிக்கிழமை) தாக்கல் செய்கிறார். இந்த கூட்டத்தொடரில் ஜனாதிபதி முர்மு சுமார் 1 மணி நேரம் உரையாற்றினார். அதன்பின்னர் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

அதன்பின்னர், ஜனாதிபதி உரை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ஜனாதிபதி இறுதிப்பகுதியை வாசிக்கும் போது சோர்வு அடைந்துவிட்டார், பேசமுடியவில்லை, பாவம் என கூறினார். சோனியா காந்திக்கு ஆதரவாக ராகுலும் கருத்துகளை தெரிவித்தார். சோனியா காந்தியின் கருத்து அரசியல் வட்டாரங்கள் இடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காங்கிரசின் இந்த கருத்துகள் இழிவானது என்று பா.ஜ.க. கடும் விமர்சனம் செய்திருந்தது.

இந்நிலையில், சோனியா காந்தியின் கருத்துக்கு ராஷ்டிரபதி பவன் விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது,

நாடாளுமன்ற உரையின் போது ஜனாதிபதி சோர்வு அடையவில்லை. காயப்படுத்தும் வகையில் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி சோர்வு அடைந்துவிட்டார், அவரால் பேசமுடியவில்லை என்று கூறி இருந்தனர். ஜனாதிபதி எந்த நிலையிலும் சோர்வு அடையவில்லை. விளிம்புநிலை மக்கள், விவசாயிகள், பெண்கள் ஆகியோருக்கு ஜனாதிபதி பேசிய உரை சோர்வை தராது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.