விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் துணைப் பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜூனா இன்று விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருந்தார். விஜய் கட்சியில் இணைந்த கையோடு திருமாவளவனையும் சந்தித்து வாழ்த்துப் பெற்றிருக்கிறார் ஆதவ் அர்ஜூனா.
விஜய்யுடன் கடந்த சில நாட்களாக ஆதவ் அர்ஜூனா தரப்பு நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்துதான் இன்று மதியம் விஜய்யின் பனையூர் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தார் ஆதவ் அர்ஜூனா. விஜய்யை சந்தித்து அரைமணி நேரம் உரையாடியவர், தவெக கட்சியிலும் தன்னை இணைத்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்துதான் ஆதவ் அர்ஜூனாவுக்கு தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளராக பதவி வழங்கி அதிகாரபூர்வ அறிவிப்பையும் விஜய் வெளியிட்டார்.
‘ஆட்சி அதிகாரத்தில் பங்கு’ ‘பிறப்பால் ஒருவர் முதல்வராகக் கூடாது..’ என ஆளுங்கட்சியை சீண்டும் வகையில் ஆதவ் அர்ஜூனா தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அதைத் தொடர்ந்துதான் அவரை விசிகவிலிருந்து 6 மாத காலத்துக்கு இடைநீக்கம் செய்து அறிவிப்பை வெளியிட்டிருந்தார் திருமாவளவன். இடைநீக்க அறிவுப்புக்குப் பிறகு தானே முழுமையாக கட்சியிலிருந்து வெளியேறுவதாக ஆதவ் அர்ஜூனா அறிவித்திருந்தார். இந்நிலையில்தான், தவெகவில் இணைந்த கையோடு திருமாவளவனை அவரின் கட்சி அலுவலகத்திலேயே சந்தித்து வாழ்த்துப் பெற்றிருக்கிறார் ஆதவ்.
திருமாவளவனுக்கு பெரியார், அம்பேத்கர் சிலையையும் எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தகத்தையும் பரிசாகக் கொடுத்தவர், தன்னுடைய புதிய பயணத்துக்கு வாழ்த்துகளைப் பெற்றார். முன்னதாக,நேற்றே ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் திருமாவே ஆதவுக்கு வாழ்த்து சொல்லியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பத்திரிகையாளர்களை சந்தித்த ஆதவ், ‘அவர் என்னுடைய தலைவர், அண்ணன், ஆசான். எங்கு கள அரசியலை கற்றுக்கொண்டேனோ அங்கேயே வந்து ஆசிபெற வந்திருக்கிறேன். கொள்கைரீதியிலான பயணத்தில் அவரிடம்தான் அதிகம் கற்றுக்கொண்டேன். தவெகவில் என்னுடைய பொறுப்பு மக்களுக்கானதாக இருக்கும். அந்த புதிய பொறுப்புக்கான நிறைய அறிவுரைகளை அண்ணன் திருமாவளவன் கொடுத்திருக்கிறார். ‘பொறுமையா போ..’ என அண்ணன் அறிவுரை கூறினார். தவெக தலைவரும் அண்ணன் திருமாவும் ஒரே கொள்கையுடையவர்கள்.
அதனால் எதிரெதிர் துருவ பயணமென்பதே இல்லை. ஒரே துருவத்தில்தான் கொள்கைரீயாக பயணிப்போம். முதல்வரை சந்தித்து வாழ்த்துப் பெறும் திட்டமெல்லாம் இல்லை. அண்ணனோடு கொள்கைரீதியாக ஒன்றிப் போகிறேன். அதனால்தான் அவரிடம் வாழ்த்துப் பெற்றேன்.’ என்றார்.