புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே லாரி ஏற்றி கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் ஜகபர் அலியின் உடல், உயர் நீதிமன்ற உத்தரவின்படி நேற்று தோண்டி எடுத்து எக்ஸ்ரே எடுக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கனிம வள கொள்ளைக்கு எதிராக செயல்பட்ட வெங்களூரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜகபர் அலி, ஜன. 17-ம் தேதி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார். மறுநாள் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கல் குவாரியின் உரிமையாளர்கள் ராசு, ராமையா உட்பட 5 பேரை திருமயம் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தமிழக அரசின் உத்தரவை தொடர்ந்து இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜகபர் அலியின் உடல், முறையாக பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை என்றும், விபத்து காயம் ஏற்பட்டதை உறுதி செய்யும் வகையில் எக்ஸ்ரே எடுக்கப்படவில்லை என்பதால் மீண்டும் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் ஜகபர் அலியின் மனைவி மரியம், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இவ்வழக்கில், நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து, வெங்களூரில் உள்ள முஸ்லிம் அடக்கஸ்தலத்தில் அடக்கம் செய்யப்பட்ட ஜகபர் அலியின் உடல் திருமயம் வட்டாட்சியர் ராமசாமி முன்னிலையில் நேற்று பிற்பகல் தோண்டி எடுக்கப்பட்டது. புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மதன்ராஜ், நெடுங்கிள்ளி ஆகியோர் தலைமையான மருத்துவக் குழுவினர் ஜகபர் அலியின் உடலின் பல்வேறு இடங்களில் எக்ஸ்ரே எடுத்தனர். அப்போது, சிபிசிஐடி டிஎஸ்பி இளங்கோவன் ஜென்னிங்ஸ், ஆய்வாளர் புவனேஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சம்பவ இடத்தை யாரும் பார்க்க முடியாத வகையில் அடைக்கப்பட்டு இருந்தது. காவல் துறை சார்பில் மட்டுமே வீடியோ, புகைப்படம் எடுக்கப்பட்டது. வேறு யாரும் எடுக்க தடை விதிக்கப்பட்டது. மேலும், வெங்களூர், கோணாப்பட்டு சாலை அடைக்கப்பட்டு, போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.