மகா கும்பமேளாவில் கின்னர் அகாடாவில் கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் பாலிட் நடிகை மம்தா குல்கர்னிக்கு அளிக்கப்பட்ட மகா மண்டலேஷ்வர் பதவிக்கு சிக்கல் உருவாகி விட்டது.
1990-ம் ஆண்டுகளில் பிரபலமாக இருந்தவர் பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி. திரைத் துறையிலிருந்து விலகி துபாயில் வாழ்ந்து வந்த இவர், சுமார் 25 வருடங்களுக்கு பிறகு இந்தியா திரும்பினார். பிரயாக்ராஜ் கும்பமேளாவில் துறவறம் மேற்கொண்டார். இவருக்கு திருநங்கைகளுக்கான கின்னர் அகாடாவில் மகா மண்டலேஷ்வர் பதவியும் அளிக்கப்பட்டது.
திருநங்கைகளுக்கு மட்டுமான அகாடாவில், மம்தா குல்கர்னி சேர்க்கப்பட்டதால் சர்ச்சைகள் எழுந்தன.
கின்னர் அகாடாவின் மூத்த துறவி ஹிமான்ஷி சக்கி கிரி கூறும்போது, “மம்தாவுக்கு நிழல் உலக தாதாக்களுடன் நெருக்கமான தொடர்பு இருந்துள்ளது. அவர் தனது கணவருடன் போதைப் பொருள் கடத்தல் வழக்கிலும் சிக்கினார். சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தார். அவரைப் பற்றி சரியாக விசாரிக்காமல் அவருக்கு பதவியும் அளிக்கப்பட்டு விட்டது” என விமர்சித்தார்.
ஜுனா அகாடாவின் ரிஷி அஜய் தாஸ் இக்கருத்தை ஆதரித்தார். 2015-ல் உஜ்ஜைன் கும்பமேளாவில் கின்னர் அகாடாவை இவர் தான் நிறுவினார். எனவே நிறுவனர் என்ற முறையில் மம்தாவுக்கு அளிக்கப்பட்ட மகா மண்டலேஷ்வர் பதவியை நேற்று ரத்து செய்வதாக அறிவித்தார். மேலும் கின்னர் அகாடாவின் தலைமை பொறுப்பிலிருந்து லஷ்மி நாராயண் திரிபாதியை நீக்குவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பை லஷ்மி திரிபாதி ஏற்க மறுத்துள்ளார். இவருக்கும் பல மூத்த திருநங்கை துறவிகளுடன், அகில இந்திய அகாடாக்கள் சபையின் தலைவரான ரவீந்திர கிரியின் ஆதரவு கிடைத்துள்ளது.
“கின்னர் அகாடாவில் தலையிட அஜய் தாஸ் யார்?” என்று ரவீந்திர கிரி கேள்வி எழுப்பியுள்ளார். இதனால், கின்னர் அகாடாவில் கோஷ்டி மோதல் உருவாகி விட்டது. இந்த இரு கோஷ்டியினரும் செய்தியாளர்களை சந்தித்து ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்தியுள்ளனர்.
இதனால் பாலிவுட்டிலிருந்து துறவறம் மேற்கொண்ட முதல் நடிகையான மம்தாவின் மகா மண்டலேஷ்வர் பதவிக்கு சிக்கலுக்கு உருவாகியுள்ளது. இந்த பதவிக்கு பின் ஷியாமாய் மம்தாணந்த் கிரி என பெயரை மாற்றிக்கொண்ட மம்தாவுக்கு சுமார் ரூ.100 மதிப்பிலான கோடி சொத்துகள் உள்ளன.