மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘முள்ளும் மலரும்’, பிரபு நடிப்பில் ‘கலியுகம்’, ‘உத்தம புருஷன்’, ‘தர்மசீலன்’, ‘ராஜா கைய வச்சா’, ‘தர்மசீலன்’, ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த ‘சின்ன கவுண்டர்’, பாரதிராஜா இயக்கத்தில் ‘பசும்பொன்’ உள்பட பல படங்களை தயாரித்த ‘ஆனந்தி பிலிம்ஸ்’ வி. நடராஜன், உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
”அவர் சிறந்த தயாரிப்பாளர். ‘முள்ளும் மலரும்’ மாதிரி தரமான படங்களை கொடுத்திருக்காங்க. நடராஜன் சார் என்னை படம் இயக்கச் சொல்லி கேட்ட போது, அந்த சமயத்தில் ‘கிழக்கு வாசல்’ வெளியாகியிருந்ததால், ‘நீங்க யாரை நடிக்க வைக்க விரும்புறீங்களோ அவங்கள வச்சு, படம் பண்ணிடலாம்’னு நடராஜன் சார் சொன்னார். விஜயகாந்த் சாருக்கு ஒரு கதை மைன்ட்ல இருந்ததால், கேப்டன் வைத்து பண்ணலாம்னு சொன்னேன். உடனே நடராஜன் சார், என் மேல் நம்பிக்கை வைத்து, கதை என்னான்னு கூட கேட்காமல் விஜயகாந்த் சாரை கமிட் செய்து கொடுத்தார். அந்தப் படம் தான் ‘சின்ன கவுண்டர்’.
தயாரிப்பாளர் விஜயகாந்த் சார்கிட்ட கால்ஷீட் கேட்டதும், நான் தான் டைரக்டர் என்றதும் அவருக்கு சந்தோஷம். ஏன்னா விஜயகாந்த் சாரோட ‘ஊழை விழிகள்’, ‘உழவன் மகன்’ படங்கள்ல நான் உதவி இயக்குநராக இருந்ததால், அவருக்கு என்னை நல்லாத் தெரியும் என்பதால் விஜய்காந்த் சார் எனக்காக உடனே தேதிகள் ஒதுக்கிக் கொடுத்தார்.
அதே வேகத்தில் படப்பிடிப்புக்கு கிளம்பினோம். தயாரிப்பாளருக்கு வீண் செலவுகள் வைக்காத இயக்குநர் என்பதால், திட்டமிட்ட பட்ஜெட்டில் படத்தை முடித்தோம். அந்த சமயத்தில் சினிமாஸ்கோப் பிரபலம். ‘ஊமைவிழிகள்’, ‘இணைந்த கைகள்’ என சினிமாஸ்கோப்பில் வந்த படங்கள் பேசப்பட்டன. ஆனால், அப்படி 70 எம்.எம்.லதான் ஷூட் பண்ணுவது பொருட்செலவு அதிகம் பிடிக்கும். ‘சின்ன கவுண்டர்’ உணர்ப்பூர்வமான ஒரு கதைங்கறதால 35 எம்.எம்.லேயே ஷூட் செய்தால் போதும் என்று சொல்லி, செலவுகளை குறைத்து படமாக்கினோம். 60 நாட்கள் திட்டமிட்டு, மொத்த படப்பிடிப்பையும் 55 நாட்கள்ல முடித்ததில் ஒரு தயாரிப்பாளராக அவருக்கு ரொம்பவே சந்தோஷம்.
நடராஜன் சார் படப்பிடிப்பில் எங்களுடன் தான் இருப்பார். படத்தில் சின்ன கேரக்டருக்கு கூட, தெரிந்த முகங்களை வைத்து போயிடலாம்னு நான் விரும்புவேன். அதே அலைவரிசை அவருக்கும் இருந்தது. ‘நீங்க யார் வேணும்னு சொல்றீங்களோ அவங்கள நடிக்க வைங்க’னு என்பார். அந்த நடிகர்களை கேட்ட தேதியில், எந்த ஊரில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தாலும் அங்கே வரவழைத்து விடுவார். ஒரு இயக்குநருக்கு தோதுவான தயாரிப்பாளர் அமைவது ஒரு வரப்பிரசாதம். அப்படி ஒரு தயாரிப்பாளர் எனக்கு கிடைச்சிருந்தார். அவரது இழப்பு சினிமாவிற்கு பேரிழப்புதான்.
அவருடன் நானும் தொடர்பில் தான் இருந்தேன். என் வீட்டிற்கு வந்து நலம் விசாரிப்பார். அவரது குறைகளையும் பகிர்ந்துக்குவார். ‘சின்னக் கவுண்டர்’ படத்துக்கு பிறகு மீண்டும் என் இயக்கத்தில் விஜயகாந்தை வைத்து ஒரு படம் தயாரிக்க விரும்பினார். நான் ரஜினி சாரோட ‘எஜமான்’ படத்திற்கு செல்ல வேண்டியதால், அவரோடு மறுபடியும் இணைவதற்கான சூழல் அமையல. ஆனாலும் அவர் ‘பசும்பொன்’ படத்தை தயாரித்தார். நடராஜனின் அப்பாவும், அண்ணனும் கூட தயாரிப்பாளர்கள் தான். ‘சின்னக் கவுண்ட’ரை நடராஜனின் அண்ணன் மோகனும் சேர்ந்து தான் தயாரித்திருந்தார். நடராஜன் சாரின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கறேன்” – என நெகிழ்கிறார் ஆர்.வி.உதயகுமார்.
மறைந்த நடராஜனுக்கு செந்தில் , விக்கி என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.