IND vs ENG: ஹர்திக் பாண்டியா செய்த புதிய சாதனை! இதுவரை யாரும் செய்ததில்லை!

புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது. பவர் பிளேயரில் விக்கெட்டுகளை இழந்த போதிலும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார், இது அணியின் வெற்றிக்கு அதிகம் உதவியது. ராஜ்கோட்டில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியின் தோல்விக்கு ஹர்திக் பாண்டியா தான் காரணம் என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில் இந்த போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் டி20 போட்டிகளில் புதிய சாதனையையும் படைத்துள்ளார் ஹர்திக் பாண்டியா.

ஹர்திக் பாண்டியாவின் சாதனை

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் 30 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் உட்பட 53 ரன்கள் அடித்தார் ஹர்திக் பாண்டியா. இந்த போட்டியில் தனது ஐந்தாவது அரை சதத்தை பூர்த்தி செய்து இருந்தார். சர்வதேச டி20 போட்டிகளில் இதுவரை 1803 ரன்கள் அடித்துள்ளார் ஹர்திக், அதே சமயம் 94 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியாவிற்காக 1500 ரன்களுக்கு மேல் அடித்து 50 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த ஒரே வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

மேலும் உலக அளவில் இந்த சாதனையை படைத்த நான்காவது வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார் ஹர்திக் பாண்டியா. இதற்கு முன்னர் இந்த சாதனையை ஷகிப் அல் ஹசன், முகமது நபி மற்றும் சிக்கந்தர் ராசா ஆகியோர் வைத்துள்ளனர். ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் இதுவரை 94 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இன்னும் 6 விக்கெடுகளை எடுத்தால் போதும், சர்வதேச டி20 வரலாற்றில் 100 விக்கெட்டுகளை எடுத்துள்ள வீரர் என்ற சாதனையை படைப்பார். இந்த சாதனையை அவர் படைக்கும் பட்சத்தில் 1000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்தியர் என்ற சாதனை படைப்பார். மேலும் ஷகிப் அல் ஹசனுக்கு அடுத்து இந்த சாதனையை படைத்த இரண்டாவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையும் பெறுவார்.

நான்காவது டி20 போட்டி

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையேயான நான்காவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்த அணி பீல்டில் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா பவர் பிளே முடிவதற்குள் மூன்று விக்கெடுகளை அடுத்தடுத்து இழந்தது. அதன் பிறகு ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்டியா மற்றும் சிவம் துபே அணியை சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் அரை சதம் அடித்து 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் செய்தனர். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 181 ரன்கள் அடித்தது. 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 166 ரங்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை இழந்துள்ளது. கடைசி மற்றும் 5வது டி20 போட்டி நாளை மும்பையில் நடைபெறுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.