“இது மத்திய அரசின் பட்ஜெட்டா, பிஹார் பட்ஜெட்டா?” – காங்கிரஸ் சரமாரி கேள்வி

புதுடெல்லி: “மிகப் பெரிய மாற்றத்துக்கான தேவை உள்ள நிலையில், இந்த அரசு யோசனைகள் இன்றி திவாலாகிவிட்டதையே மத்திய பட்ஜெட் உணர்த்துகிறது” என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. குறிப்பாக, பிஹாரை முன்வைத்து காட்டமாக கேள்விகளை அக்கட்சி எழுப்பியுள்ளது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. மத்திய பட்ஜெட்டை விமர்சிக்கும் வகையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “குண்டு காயங்களுக்கு பேண்ட்எய்டு போடப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் நிச்சயமற்ற தன்மை நிலவும் சூழலில், நமது பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு ஒரு முன்னுதாரண மாற்றம் தேவைப்பட்டது. ஆனால், இந்த அரசு யோசனைகள் விஷயத்தில் திவாலாகி விட்டது” என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான மணீஷ் திவாரி, “இது இந்திய அரசின் பட்ஜெட்டா அல்லது பிஹார் அரசின் பட்ஜெட்டா என்ற கேள்வி எழுகிறது. நிதியமைச்சரின் உரையில் பிஹார் தவிர வேறு எந்த மாநிலத்தின் பெயரும் உச்சரிக்கப்பட்டதாக தெரியவில்லை. மத்திய பட்ஜெட்டை பொறுத்தவரை, முழு நாட்டுக்கும் பட்ஜெட்டில் ஏதாவது இருக்க வேண்டும். ஆனால், இந்த பட்ஜெட் மிகவும் துரதிருஷ்டவசமானது. கூட்டணிக் கட்சிகளை நிலையாக வைத்திருக்க பாஜக முழு நாட்டையும் பணயம் வைத்துள்ளது. வரி திட்டத்தை கவனமாக ஆய்வு செய்ய வேண்டும். நிதியமைச்சர் சில கூற்றுகளை முன்வைத்துள்ளார். அவை பரிசீலிக்கப்பட வேண்டும். அதன் நுணுக்கங்களை ஆராய வேண்டும், அதன் பிறகுதான் நாம் ஒரு முடிவுக்கு வர முடியும்” என தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை துணைத் தலைவர் கவுரவ் கோகாய், “கடந்த 10 வருடங்களாக நாம் கேட்டு வரும் அதே பழைய பட்ஜெட் தான் இது. ஏழைகள், விவசாயிகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு வார்த்தைகளைத் தவிர வேறு எதுவும் கிடைக்காது. வரி திட்டங்கள் பெரிய நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு மட்டுமே பயனளிக்கும். வரி மாற்றங்கள் முன்பும் செய்யப்பட்டன, ஆனால் நடுத்தர வர்க்கத்தினருக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. இந்த பட்ஜெட் கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் பலவீனமான பட்ஜெட்டாகும்” என கூறினார்.

முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சசி தரூர், “வருமான வரி விகிதங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள குறைப்பு குறித்து பாஜகவினர் ஆரவாரம் செய்து வருகிறார்கள். இது குறித்த விவரங்களுக்காக நாம் அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்கிறோம். நமது பொருளாதாரத்தின் தன்மை குறித்தும், அவற்றை நிவர்த்தி செய்ய நிதியமைச்சர் என்ன செய்வார் என்பது குறித்தும் இன்னும் தெளிவாகத் தெரியாத சில அடிப்படை கேள்விகள் உள்ளன.

தேசிய உற்பத்தித் திட்டத்தை உறுதி செய்ய அரசு என்ன செய்யப் போகிறது? முதலீட்டுச் சூழல் தற்போது மோசமாக உள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை வெளியே எடுத்து வருகிறார்கள். உள்நாட்டு முதலீட்டாளர்களும் முதலீடு செய்யவில்லை. கூடுதல் உற்பத்திக்கு பணம் எங்கிருந்து வரப் போகிறது? வேலையின்மை என்பது நமது பொருளாதாரம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய நெருக்கடி. அதைப் பற்றி நிதி அமைச்சர் பேசவே இல்லை. உங்களுக்கு சம்பளம் இருக்கிறது; நீங்கள் குறைவாக வரி செலுத்தலாம். ஆனால் சம்பளம் இல்லாதவர்களின் நிலை என்ன? அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். ஆனால், அதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து நாம் முழுமையாகப் பார்க்க வேண்டும். பொருளாதாரம் எதிர்கொள்ளும் மையப் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்பது எனது உணர்வு. ஒரு வருடத்திற்கு முன்பு கணிக்கப்பட்டதை விட பொருளாதார வளர்ச்சி மிகவும் குறைவாக உள்ளது.

ஏற்றுமதி 20%-க்கும் குறைவாக உள்ளது. ஏற்றுமதியை நிதி அமைச்சர் எவ்வாறு மேம்படுத்தப் போகிறார்? அது இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை. நிதிப் பற்றாக்குறை பற்றிய கேள்வியும் அதே அளவு தெளிவாக இல்லை. முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, 3% நிதிப் பற்றாக்குறையை நோக்கி நகர்வது பற்றி கவலையுடன் பேசியது எனக்கு நினைவிருக்கிறது. ஆனால், இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மகிழ்ச்சியுடன் 4.8% நிதிப் பற்றாக்குறையை அறிவிக்கிறார்.

மேலும், பிஹார் சட்டப்பேரவை தேர்தல் காரணமாகவே இந்த பட்ஜெட்டில் பிஹார் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது என்பது தெளிவாகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை விரும்பும் ஒரு கட்சி, ஒவ்வொரு தேர்தலையும், ஒவ்வொரு ஆண்டும், மக்களுக்கு அதிக இலவசங்களை வழங்கப் பயன்படுத்துகிறது என்பது முரண்பாடாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.