திருநெல்வேலியில் `அவள் கிச்சன்’ சீசன் 2 – ஆர்வமாக கலந்துகொண்ட பெண்கள்; அசத்தலாக தொடங்கிய நிகழ்ச்சி!

திருநெல்வேலி ரோஸ் மஹாலில், அவள் விகடன் மற்றும் சக்தி மசாலா இணைந்து நடத்தும் ‘அவள் கிச்சன்’ சீசன் 2 நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 10 மணிக்குத் தொடங்கிய நிகழ்ச்சியை செஃப் தீனா மற்றும் நெல்லை பொருநை மருத்துவமனை மருத்துவர் கிருஷ்ணவேணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றினர்.

அதைத் தொடர்ந்து பேசிய செஃப் தீனா, “திருநெல்வேலியின் உணவுப் பாரம்பர்யம் சிறப்புக்குரியது. இந்தப் பகுதியில் விளையும் பொருள்களைக் கொண்டு வீட்டில் தயார் செய்யப்படும் உணவுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கடைகளில் கிடைக்கும் ஜங்க் உணவுகளை உட்கொண்டால் நீரிழிவு உள்ளிட்ட நோய்களுக்கு உட்பட நேரிடும். சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள வேண்டியதும் மிகவும் அவசியம்” என்று பேசியதை, கூடியிருந்த கூட்டத்தினர் கரவொலி எழுப்பி ஆமோதித்தனர்.

பொருநை மருத்துவமனையின் மகப்பேறு சிறப்பு மருத்துவர் கிருஷ்ணவேணி பேசுகையில், “பெண்களின் உடல் நலன் மிகவும் முக்கியம். பெண் ஆரோக்கியத்துடன் இருந்தால் ஒட்டுமொத்த குடும்பத்துக்கே நல்லது. காரணம் பெண்கள்தான் குடும்பத்தின் ஆணி வேர். அதனால் நாம் நன்றாக இருப்பதன் மூலம் ஒட்டுமொத்த சமூகமும் பயனடையும். அதற்கு மூன்று முக்கியமானவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். முதலாவதாக உணவு. நாம் சாப்பிடும் உணவு ஆரோக்கியம் மிக்கதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். குறித்த நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக, உடற்பயிற்சி மிகவும் அவசியம். பெரிய அளவில் இல்லாவிட்டாலும், உடலைப் புத்துணர்வாக வைத்துக் கொள்ளும் அளவுக்காவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். அடுத்ததாக தூக்கம். அதுவும் இரவு நேரத் தூக்கம் மிக அவசியமானது. இரவில் சீக்கிரமாகவே தூங்கி காலையில் சீக்கிரம் எழுந்தால் உடலுக்கு எந்த நோயும் ஏற்படாது. பெண்களில் பலர் தங்களது நோயை மருத்துவரிடம்கூட தெரிவிக்கத் தயங்குகிறார்கள்.

புற்றுநோய்களிலேயே முதல் முறையாக கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி வந்துவிட்டது. அதை மருத்துவரின் ஆலோசனை பெற்று 45 வயதுக்கு உள்பட்டவர்கள் போட்டுக் கொள்ளாலாம். அத்துடன்,பெண்கள் தாங்களாகவே மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். வருடத்துக்கு ஒருமுறையாவது மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அனைவரும் ஆரோக்கியமாக இருக்கும் வகையில் நடத்தப்படும் அவள் கிச்சன் சமையல் போட்டிகளில் வெற்றிபெற பாராட்டுகள்” என பேசினார்.

அதைத் தொடர்ந்து ‘அவள் கிச்சன்’ சீசன் 2′ போட்டி தொடங்கியது. அதில் கலந்துகொண்ட பெண்கள், தங்களது சமையல் திறமையை வெளிப்படுத்தினர். உணவு, ஆரோக்கியம் மற்றும் மகளிர் நலம் குறித்து பேசப்பட்ட, இது போன்ற நிகழ்ச்சிகள் மேலும் அதிகம் நடக்க வேண்டும் என்ற ஆசையை போட்டியாளர்கள் பலரும் விருப்பம் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.