ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லை!: நடுத்தர வர்க்கத்தினருக்கு சிறப்பு கவனம் செலுத்தும் வகையில், புதிய வருமான வரி கட்டமைப்பின் கீழ் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் மொத்த வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரி இல்லை. அதாவது, மூலதன ஆதாயங்கள் போன்ற சிறப்பு விகித வருமானத்தைத் தவிர மாதத்துக்கு சராசரி வருமானம் ரூ.1 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. அத்துடன், நிலையான கழிவுத் தொகை ரூ.75,000 அளிக்கப்படுவதன் காரணமாக ரூ.12.75 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்த வேண்டியதில்லை என்று 2025-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். புதிய வருமான வரி விதிப்பு முறையின்படி, புதிய வருமான வரிவிதிப்பு முறைப்படி ரூ.12,75,000-க்கு மேல் கூடுதல் வருவாய் ஈட்டுவோர் செலுத்த வேண்டிய வரி விகிதம் இது:
ரூ.4 லட்சம் வரை – வரி இல்லை
ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை – 5%
ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 10%
ரூ.12 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை – 15%
ரூ.16 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை – 20%
ரூ.20 லட்சம் முதல் ரூ.24 லட்சம் வரை – 25%
ரூ.24 லட்சத்துக்கு மேல் 30%
புதிய முறையின் கீழ் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகப் பெரிய நிம்மதி தரும் அம்சமாக பார்க்கப்படுகிறது. இந்த முடிவை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். மேலும், வருமான வரி வருமானத்தை தாக்கல் செய்வதற்கான கால வரம்பை, தற்போதைய இரண்டு ஆண்டுகளில் இருந்து நான்கு ஆண்டுகளாக நீட்டிப்பதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
வாடகை மீதான டிடிஎஸ் வரம்பு உயர்வு: மூத்த குடிமக்களுக்கான வட்டி மீதான வரி விலக்குக்கான வரம்பு தற்போதைய ரூ.50,000-ல் இருந்து ரூ. 1 லட்சமாக இரட்டிப்பாக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல், வாடகை மீதான டிடிஎஸ்-க்கான ஆண்டு வரம்பு ரூ.2.40 லட்சமாக இருப்பதை ரூ. 6 லட்சமாக உயர்த்தும் அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
36 உயிர் காக்கும் மருந்துகளுக்கு முழு வரி விலக்கு: புற்றுநோய், அரிய வகை நோய்கள் மற்றும் இதர நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய 36 உயிர் காக்கும் மருந்துகளுக்கு சுங்க வரியில் இருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 5 சதவீத சலுகை சுங்க வரி விதிக்கும் பட்டியலில் மேலும் 6 உயிர் காக்கும் மருந்துகளை சேர்த்திருப்பதாகவும் பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
கேசிசி கடன் தொகை உயர்வு: கேசிசி எனப்படும் விவசாயிகள் கடன் அட்டை திட்டத்தின் கீழ், வட்டி மானியத்துடன் கூடிய குறுகிய கால கடன் தொகை ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். குறைந்த அளவு வேளாண் உற்பத்தித் திறன் உள்ள 100 மாவட்டங்களை உள்ளடக்கிய ‘பிரதமரின் தன்-தானிய வேளாண் திட்டத்தில்’ 1.7 கோடி விவசாயிகள் பயனடைவார்கள்.
அடுத்த ஐந்தாண்டுகளில் அரசுப் பள்ளிகளில் 50,000 அடல் டிங்கரிங் சோதனைக் கூடங்கள் அமைக்கப்படும். மொத்தம் ரூ.500 கோடி முதலீட்டுடன் கல்விக்கான செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையம். தனியார் துறை மூலமான ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் புதிய கண்டுபிடிப்பு முயற்சிகளுக்கு ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பன உள்ளிட்ட அறிவிப்புகளும் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளனர்
மின்சார வாகனங்கள் விலை குறைய வாய்ப்பு: மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகள் தயாரிப்பில் 35 மூலப் பொருட்கள் தேவைப்படுகின்றன. அதேபோன்று மொபைல்போன் பேட்டரி தயாரிப்பில் 28 மூலப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுக்கு அளிக்கப்பட்டு வந்த வரி விலக்கை நீட்டிக்க மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் பரிந்துரை செய்துள்ளார். அவரின் இந்த முடிவால், உள்நாட்டில் லித்தியம் – அயன் பேட்டரிகள் தயாரிப்பு வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று, மொபைல்போன் மற்றும் மின் வாகன உற்பத்தியாளர்களும் இந்த வரி விலக்கு சலுகை நீட்டிப்பால் பெரிதும் பயனடைவர் என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
மருத்துவக் கல்லூரிகளில் 10,000 கூடுதல் இடங்கள்!: “அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் பகல் நேர புற்றுநோய் மையங்கள் அமைக்கப்படும். 2025-26-ல் அத்தகைய 200 மையங்கள் அமைக்கப்படும். மருத்துவக் கல்லூரிகளில் 10,000 கூடுதல் இடங்கள் அடுத்த ஆண்டில் உருவாக்கப்படும். இது தொடர்ச்சியாக அடுத்த 5 ஆண்டுகளில் 75,000 கூடுதல் இடங்களை அதிகரிக்கும் மத்திய அரசின் இலக்கை நோக்கமாக கொண்டுள்ளது” என மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
22 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு தரும் திட்டம்: இந்தியாவின் காலணி, தோல் துறையின் உற்பத்தித் திறன், தரம், போட்டித்தன்மை ஆகியவற்றை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், இந்தத் திட்டம் 22 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் என்றும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் ரூ. 4 லட்சம் கோடி வருவாய் ஈட்டும் என்றும், ரூ. 1.1 லட்சம் கோடிக்கு மேல் ஏற்றுமதி வாய்ப்புகளை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்றும் குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன், இந்தியாவை பொம்மைகளுக்கான உலகளாவிய மையமாக மாற்றுவதற்காக பொம்மைகளுக்கான தேசிய செயல் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.
தொழில் தொடங்கும் எஸ்சி/எஸ்டி பெண்களுக்கு ரூ.2 கோடி வரை கடன்!: குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதம் 5 கோடியிலிருந்து 10 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. உதயம் தளத்தில் பதிவுசெய்யப்பட்ட குறு நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் வரம்புடன் 10 லட்சம் தனிப்பயனாக்கப்பட்ட கிரெடிட் கார்டுகள் முதல் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும். புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.10,000 கோடி நிதிகளில் நிதி உருவாக்கப்படும். முதல் முறையாக தொழில் தொடங்கும் எஸ்சி / எஸ்டி பிரிவைச் சேர்ந்த 5 லட்சம் பெண்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2 கோடி வரையிலான கடன் வழங்க ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட் – வரவேற்பும் அதிருப்தியும்: நாட்டு மக்களின் சேமிப்பு, முதலீடு, நுகர்வு, வளர்ச்சி ஆகியவற்றை விரைவாக அதிகரிக்க மிகவும் வலுவான அடித்தளத்தை அமைக்கக்கூடிய பட்ஜெட் இது என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். அதேநேரத்தில், “இது இந்திய அரசின் பட்ஜெட்டா அல்லது பிஹார் அரசின் பட்ஜெட்டா என்ற கேள்வி எழுகிறது” என்று காங்கிரஸ் காட்டமாக விமர்சித்துள்ளது.
“நாட்டில் வேலையின்மை என்பது நமது பொருளாதாரம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய நெருக்கடி. அதைப் பற்றி நிதி அமைச்சர் பேசவே இல்லை. உங்களுக்கு சம்பளம் இருக்கிறது; நீங்கள் குறைவாக வரி செலுத்தலாம். ஆனால் சம்பளம் இல்லாதவர்களின் நிலை என்ன? அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். ஆனால், அதற்கான எந்த அறிகுறியும் இல்லை” என்றும் காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இந்த பட்ஜெட்டில் தமிழகத்துக்கு சிறப்புத் திட்டங்கள் எதுவுமே இல்லை என்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
விலை குறையும், உயரும் பொருட்கள்: மத்திய பட்ஜெட்டின் வரி விதிப்பு மாற்றங்களின் எதிரொயால் புற்றுநோய் மருந்துகள், மொபைல்போன், சார்ஜர், எல்இடி/எல்சிடி, இறக்குமதி தங்கம், வெள்ளி பிளாட்டினம், கடல் உணவுப் பொருட்கள், தோல் பொருட்கள், சோலார் பேனல் தயாரிப்புகள் மற்ரும் முக்கியமான 25 கனிமங்கள் விலை குறையும். அதேவேளையில் பின்னலாடை ஜவுளிகள், ஃப்ளாட் பேனல் டிஸ்ப்ளே, பிளாஸ்டிக் பொருட்கள், தொலைத்தொடர்பு தயாரிப்புகள் மற்றும் அமோனியம் நைட்ரேட் உள்ளிட்டவற்றின் விலை அதிகரிக்கும்.