கனடா, மெக்சிகோ மற்றும் சீனா நாடுகளுக்கான வரி விதிப்பு இன்று முதல் அமல்: வெள்ளை மாளிகை

வாஷிங்டன் டி.சி.,

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்று டொனால்டு டிரம்ப் ஜனாதிபதியானார். கடந்த ஜனவரி 20-ந்தேதி நடந்த பதவியேற்பு விழாவில் புதிய ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்று கொண்டார். அவர் பதவிக்கு வந்ததும் பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.

இந்நிலையில், அமெரிக்காவில் சட்டவிரோத வகையில் பென்டனைல் எனப்படும் மருந்து பொருள் விநியோகிக்கப்பட்டு உள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த பென்டனைல் என்ற மருந்து பொருள் வலி நிவாரணியாக மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதனால், கோடிக்கணக்கான அமெரிக்க மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை தொடர்ந்து, இந்த பென்டனைலை விநியோகித்ததற்காக கனடா, மெக்சிகோ மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு வரிகளை விதிப்பது என புதிதாக அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு முடிவு செய்தது.

அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு இன்று முதல் அமலுக்கு வரும் என தகவல் தெரிவிக்கின்றது. இதுபற்றி வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட் செய்தியாளர்களிடம் கூறும்போது, மெக்சிகோ மற்றும் கனடா நாடுகள் மீது 25 சதவீதம் அளவுக்கு வரி விதிக்கப்பட உள்ளது. சீனா மீது 10 சதவீத வரி விதிக்கப்படும்.

அமெரிக்காவுக்குள் சட்டவிரோத வகையில் பென்டனைலை அனுப்பியதற்காக டிரம்ப் இந்த வரி விதிப்பை கொண்டு வந்துள்ளார். இதனால், கோடிக்கணக்கான அமெரிக்கர்கள் பலியானார்கள் என தெரிவித்து உள்ளார்.

இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வரும். எனினும், மார்ச் 1-ந்தேதி முதல் இந்த வரி விதிப்பு அமலுக்கு வரும் என சில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. இதனை மறுத்துள்ள கரோலின், அவை பொய்யானவை என்றும், பிப்ரவரி 1-ந்தேதி முதல் இந்த வரி விதிப்பை அமலுக்கு கொண்டு வர டிரம்ப் திட்டமிட்டிருக்கிறார் என்றும் குறிப்பிட்டார்.

இந்த வாக்குறுதிகளை கூறியது டிரம்ப். அவர் இதனை நடைமுறைப்படுத்துவார். அது இன்றில் இருந்து நடைமுறைக்கு வரும் என உறுதிப்படுத்தி உள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது, சீன தயாரிப்பு பொருட்களுக்கு 60 சதவீதம் அளவுக்கு வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் கூறினார். எனினும், பதவிக்கு வந்ததும் உடனடியான நடவடிக்கை எதிலும் அவர் ஈடுபடவில்லை. இந்த விவகாரம் பற்றி ஆய்வு செய்யும்படி தன்னுடைய நிர்வாகத்தினருக்கு உத்தரவிட்டு உள்ளார்.

கனடாவுக்கு எதிராக ஏதேனும் வரி விதிக்கப்பட்டால், அதற்கான பதிலடி கடுமையான மற்றும் சரியான காரணத்துடன் கூடிய உடனடி நடவடிக்கையாக இருக்கும் என்று அந்நாட்டுக்கான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.