அஜித்துக்கு தனி பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார் யோகி பாபு.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் ‘விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ என இரண்டு படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கிறது. இதனிடையே சமீபத்தில் துபாயில் நடந்த கார் ரேஸில் கலந்துகொண்டு 3-ம் இடம் பிடித்து வெற்றி பெற்றார். இந்த வெற்றியை பாராட்டி சினிமா நட்சத்திரங்கள், ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்துகள் தெரிவித்திருந்தனர்.
இதனைத்தொடர்ந்து அஜித்துக்கு பத்ம பூஷன் விருதை மத்திய அரசு அறிவித்திருந்தது. அஜித் ரசிகர்கள் தொடங்கி, அரசியல்வாதிகள், திரைப்பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். அஜித் அனைவருக்கும் நன்றி தெரிவித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் யோகிபாபுவிடம் அஜித் பத்ம பூஷன் வென்றது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “எவ்வளவு பெரிய சாதனைப் படைத்திருக்கிறார். மிகவும் பெரிய விஷயம் அது. அவரை நம் எல்லோரும் பாராட்டணும்.
அவருக்கு தனி பாராட்டு விழாவே நடத்தணும். அந்த விழாவில் நான் கட்டாயம் கலந்து கொள்வேன். அப்போது அஜித் சார் குறித்து நான் நிறைய பேசுகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.