அண்ணா நினைவுநாள் | முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியாக சென்று மரியாதை

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாள் இன்று (பிப்.3-ம் தேதி) அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கட்சியின் பொதுச் செயலாளர் துரை முருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும், மலர்களைத் தூவியும் மரியாதை செலுத்தினர்.

முன்னதாக வாலாஜா சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அருகில் இருந்து புறப்பட்டு, அண்ணா நினைவிடம் வரை நடைபெற்ற அமைதிப் பேரணியில் முதல்வர் ஸ்டாலின், திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திமுக பொருளாரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா அமைச்சர்கள் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், ராஜகண்ணப்பன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு , மெய்யநாதன் கயல்விழி செல்வராஜ் , மதிவேந்தன். மற்றும் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், சட்டப்பேரவை உறுப்பினர்கள், சென்னை மேயர், துணை மேயர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அவர்கள் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். மெரினாவில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்திலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

‘வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள்’ – மேலும் அண்ணா நினைவு நாளை ஒட்டி முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “அண்ணா வழியில் அயராது உழைப்போம்! தந்தை பெரியார் குறித்து பேரறிஞர் அண்ணா கூறியது: “எது நேரிடினும் மனத்திற்பட்டதை எடுத்துச் சொல்வேன் என்ற உரிமைப் போர் பெரியாருடைய வாழ்வு முழுவதும். அதிலே அவர் கண்ட வெற்றி மிகப்பெரியது. அந்த வெற்றியின் விளைவு அவருக்கு மட்டும் கிடைத்திடவில்லை; இன்று அனைவரும் பெற்றுள்ளனர்.”

தந்தை பெரியாரின் புகழொளியையும் – அறிவொளியையும் தந்து நம்மை ஆளாக்கிய தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ்வணக்கம்! நம்முடைய நோக்கம் பெரிது! அதற்கான பயணமும் பெரிது! வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள்; நாம் மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று இலட்சியப் பயணத்தில் வெல்லப் பாடுபடுவோம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.