Dhoni Political Entry News Latest Updates: கிரிக்கெட் வீரர்கள் பலரும் அரசியலுக்குள் புகுந்து எம்எல்ஏக்களாக, எம்.பி.,களாக, அமைச்சர்களாக பல்வேறு பொறுப்புகளிலும், பதவிகளிலும் அலங்கரித்துள்ளனர். அந்த வகையில், தற்போதைய இந்திய கிரிக்கெட் உலகில் கோடிக்கணக்கான ரசிகர்களால் கொண்டாடப்படும் வீரராகவும், அதிக செல்வாக்கு மிக்க வீரராகவும் திகழ்பவர் எம்எஸ் தோனி. ஆனால், இவர் அரசியல் சார்ந்து பெரியளவில் ஒதுங்கியே இருக்கிறார்.
பின்தங்கிய பகுதியில் இருந்து வந்து, வளர்ந்து பெரிய உயரத்தை அடைந்திருக்கிறார் தோனி. இவர் 2019ஆம் ஆண்டுக்கு பின் சர்வதேச கிரிக்கெட்டை விளையாடவில்லை. சர்வதேச போட்டிகளில் ஓய்வை அறிவித்து 5 ஆண்டுகள் ஆகப்போகிறது. ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார்.
தோனிக்கு இருக்கும் மக்கள் ஆதரவு
அப்படியிருக்க, வருடாவருடம் அவர் விளையாடும் போட்டிகளை காண மட்டும் அதிகமானோர் ஆர்வத்துடன் மைதானங்களை நோக்கி படையெடுக்கின்றனர் எனலாம். அவர் மைதானத்திற்கு நுழையும்போது விண்ணை முட்டும் அளவிற்கு ரசிகர்கள் கூச்சலிட்டு கொண்டாடி மகிழ்கிறார்கள். அவர் விளையாடுவதே தனித்திருவிழாவை போல் பார்க்கப்படுகிறது. இப்படி மக்கள் கூட்டம் அவர் பேசுவதை, அவர் கூறும் அறிவுரைகளை பின்பற்றி நடக்க இருந்தும், தோனி அரசியலில் ஆர்வம் காட்டாமல் இருக்கிறார்.
இந்நிலையில், பிசிசிஐ துணை தலைவரும், மாநிலங்களவை தலைவருமான ராஜீவ் சுக்லா தோனி அரசியலுக்கு சரியானவர் என தெரிவித்திருப்பது பெரும் கவனத்தை பெற்றிருக்கிறது. சமீபத்திய யூ-ட்பூப் நேர்காணல் ஒன்றில்,”தோனி ஒரு அரசியல்வாதியாக முடியும் என்று நான் நினைக்கிறேன். அவர் அரசியலுக்கு வருவதும், வராததும் அவரை பொறுத்தது. சௌரவ் கங்குலி, வங்காள அரசியலில் நுழைவார் என்று நான் எப்போதும் நினைத்தேன்.
அரசியலுக்கு வருவாரா தோனி?
தோனி அரசியலிலும் சிறப்பாக இருக்க முடியும். அவர் எளிதாக வெற்றி பெறுவார், அவர் பிரபலமானவர். அவர் அரசியலில் நுழைவாரா என்று எனக்குத் தெரியவில்லை, அது முற்றிலும் அவரது கைகளில்தான் இருக்கிறது. தோனி மக்களவைத் தொகுதிக்கு போட்டியிடப் போகிறார் என்ற தகவலை கேள்விப்பட்டேன். நீங்கள் தேர்தலில் போட்டியிடுகிறீர்களா என நான் அவரிடம் ஒரு முறை கேட்டேன். அதற்கு அவர் ‘இல்லை, இல்லை, இல்லை’ என பதிலளித்தார்” என ராஜீவ் சுக்லா தோனி குறித்து பேசியிருந்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய சுக்லா,”பொதுவெளியில் இருந்து எப்போதும் மறைந்திருப்பது இயல்பானதுதான். அவர் தன்னிடம் மொபைல் போனை கூட வைத்திருக்கவில்லை. பிசிசிஐ தேர்வாளர்கள் அவரை அணுகுவது கூட கடினமாக இருந்தது. ஏனெனில் அவரிடம் மொபைல் இருக்காது. புகழில் இருந்து மறைந்திருப்பது அவரின் இயல்பாகவே இருக்கிறது” என்றார். தோனி வரும் ஐபிஎல் 2025 தொடரில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.