“பதவி ஆசையை கைவிடுங்கள்!” – தலைமைத் தேர்தல் ஆணையரை சாடிய அரவிந்த் கேஜ்ரிவால்

புதுடெல்லி: இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஓய்வுக்குப் பின்பான பதவிக்காக பாரதிய ஜனதா கட்சியிடம் சரணடைந்து விட்டதாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், பதவி ஆசையை கைவிடுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

டெல்லி பேரவைத் தேர்தலுக்கான இறுதி பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டெல்லி முன்னாள் முதல்வர் கேஜ்ரிவால், “இன்று தேர்தல் ஆணையம் பாரதிய ஜனதா கட்சியிடம் சரணடைந்திருக்கும் விதத்தைப் பார்க்கும்போது, தேர்தல் ஆணையம் என்ற ஒன்று இல்லாதது போல தோன்றுகிறது. இது மிகப் பெரிய கேள்விகளை எழுப்புகின்றன.

தலைமைத் தேர்தல் ஆணையராக இருக்கும் ராஜீவ் குமார் இந்த மாதம் இறுதியில் ஓய்வு பெறுவது குறித்து மக்கள் மனதில் பல கேள்விகள் எழுவது நியாயமானதே. ஓய்வுக்குப் பின்பு அவருக்கு என்ன மாதிரியான பதவிகள் வழப்படும்? ஆளுநர் பதவியா அல்லது குடியரசுத் தலைவர் பதவியா? நான் ராஜீவ் குமாரிடம் இரு கரம் கூப்பி ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். உங்களின் கடமையைச் செய்யுங்கள், பதவி ஆசையை விட்டுவிடுங்கள், பதவிக்கான பேராசையை விட்டுவிடுங்கள். உங்களின் பதவிக் காலத்தின் இறுதியில் நாட்டை, நாட்டின் ஜனநாயகத்தை அளிக்காதீர்கள்” என்று தெரிவித்தார்.

கேஜ்ரிவால் vs தேர்தல் ஆணையம்: புதுடெல்லி தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா, தொகுதியில் பணம் விநியோகம் செய்வதாகவும், தேர்தல் ஆணையம் செயல்படவில்லை என்றும் குற்றம்சாட்டியிருந்தார். அதேபோல் இந்த மாதத்தின் தொடக்கத்தில், ஹரியானா பாஜக அரசு டெல்லிக்கு அனுப்பும் யமுனை நதி நீரில் விஷம் கலந்துவிட்டது என்ற குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

இதற்கு பதில் அளித்திருந்த கேஜ்ரிவால், “டெல்லி மக்கள் குடிக்கும் தண்ணீரின் தரம் குறித்த அவசர பொது சுகாதார நெருக்கடியின் பின்னணியில் தான் அத்தகைய கருத்துகளை தெரிவித்தாக விளக்கம் அளித்திருந்தார். இதனிடையே, புதுடெல்லி தொகுதியில் பாஜகவினரின் அட்டுழியங்கள் காரணமாக தேர்தல் நடவடிக்கைகளைக் கண்காணிக்க சிறப்பு பார்வையாளரை நியமிக்க வேண்டும் என்று ஞாயிற்றுக்கிழமை கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு பதில் அளித்திருந்த பாஜக, “அரவிந்த் கேஜ்ரிவால் பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் தோல்வியை உணர்ந்துவிட்டார். அது அவரது மொழி மற்றும் மனநிலையை பாதித்துவிட்டது” என்று தெரிவித்துள்ளது.

டெல்லி பேரவைக்கு பிப்ரவரி 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குகள் 8-ம் தேதி எண்ணப்படுகின்றன. இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க ஆம் ஆத்மி முயற்சித்து வருகிறது. பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் மீண்டும் தலைநகரில் அதிகாரத்தைப் பிடிக்க தீவிரம் காட்டிவருகின்றது. இதனால் டெல்லியில் மும்முனைப் போட்டி நிலவி வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.