‘பட்ஜெட்டில் தமிழகத்துக்கு அநீதி’ – பிப்.8-ல் திமுக கண்டன பொதுக் கூட்டம்

சென்னை: “பட்ஜெட்டில் தமிழகத்துக்கு அநீதி இழைத்த மோடி அரசுக்கு எதிராக பிப்.8-ல் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும்.” என்று திமுக அறிவித்துள்ளது.

இதுகுறித்து திராவிட முன்னேற்ற கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஓரவஞ்சனையான நிதிப் பகிர்வு, தமிழகத்தின் முக்கியத் திட்டங்கள் புறக்கணிப்பு, தமிழக முதல்வரின் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்குப் பின்பும், எஸ்.எஸ்.ஏ. பேரிடர் மேலாண்மை ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்காதது. மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரைக் கூட உச்சரிக்காதது என நிதிநிலை அறிக்கையிலும் தமிழகத்துக்கு அநீதி இழைத்த மோடி அரசைக் கண்டித்து வருகிற பிப்ரவரி 8, சனிக்கிழமை, மாலை தமிழகம் முழுவதும் அனைத்துக் கழக மாவட்டங்களின் சார்பில் “கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மத்திய நிதிநிலை அறிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: மத்திய நிதிநிலை அறிக்கை என்றாலே தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஓரவஞ்சனைதானா, தமிழ்நாடு என்ற பெயர்கூட தொடர்ந்து இடம்பெறுவதில்லையே, எத்தனையோ கோரிக்கைகளை முன்வைத்தோமே, அதில் ஒன்றைக்கூடவா உறுதிசெய்து அறிக்கையில் சேர்க்க மனம் வரவில்லை, நெடுஞ்சாலைகள் – ரயில்வே திட்டங்கள், கோவை, மதுரை மெட்ரோ ரயில் எதையுமே கொடுக்காதது ஏன், எது தடுக்கிறது?

பொருளாதார ஆய்வறிக்கை, உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை அறிக்கை, நிதி ஆயோக் அறிக்கை என மத்திய அரசின் அனைத்து அறிக்கைகளிலும் முதன்மையான இடத்தைப் பிடிக்கிறது தமிழகம். பக்கத்துக்குப் பக்கம் தமிழகத்தின் செயல்பாடுகளுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்கப்படுகிறது. ஆனால், நிதிநிலை அறிக்கையில் மட்டும் இந்த ஆண்டும் தமிழகம் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஏன்?

தமிழகம் ஏற்காத கொள்கைகளையும் மொழியையும் திணிப்பதில் காட்டும் ஆர்வத்தில் சிறு துளியையாவது நிதி ஒதுக்கீட்டில் காட்ட வேண்டாமா, மத்திய அரசானது தன்னுடைய திட்டங்களில் தன்னுடைய பங்குத் தொகையைக் குறைத்து கொண்டே வருவதால், மாநில அரசின் நிதிச்சுமை அதிகரித்துக் கொண்டே வருகிறது. பல்வேறு திட்டங்களில் மிகவும் குறைவாக மானியத் தொகையை வழங்கும் மத்திய அரசு, அதிலும் பல்வேறு கட்டுப்பாடுகளைத் தமிழகத்துக்கு மட்டும் விதித்துள்ளது. விளம்பர மோகம் கொண்ட மத்திய அரசு, திட்ட விளம்பரங்களில் மத்திய அரசின் முத்திரை இடம் பெறாவிட்டால், திட்டம் சரியாகவும் செம்மையாகவும் செயல்படுத்தப்பட்டிருப்பினும், நமக்குச் சேரவேண்டிய திட்ட நிதியை விடுவிப்பதில்லை. விளம்பரம் ஒன்றையே பாராட்டும் மத்திய அரசு, மக்கள் நலனில் எந்தவொரு அக்கறையையும் காட்ட மறுக்கிறது.

வெற்றுச் சொல் அலங்காரங்களும், வஞ்சனையான மேல் பூச்சுகளும் கொண்ட அறிக்கையின் மூலமாக இந்திய நாட்டு மக்களை வழக்கம்போல் ஏமாற்றும் பாஜகவின் பம்மாத்து நாடகம் தொடர்கிறது. எந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதோ, எங்கு பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளதோ அந்த மாநிலத்துக்கு மட்டும்தான் திட்டங்களும் நிதியும் அறிவிக்கப்படும் என்றால் ‘மத்திய’ நிதிநிலை அறிக்கை என இதனை அழைக்க வேண்டிய அவசியம் என்ன? ” என்று பதிவிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.