புதுடெல்லி: ட்ரம்ப்பின் பதவியேற்பு விழாவுக்காக பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவே வெளியுறவுத் துறை அமைச்சர் டிசம்பரில் பலமுறை அமெரிக்கா சென்றார் என்ற ராகுல் காந்தியின் கூற்றை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும், தனது டிசம்பர் மாத அமெரிக்க பயணம் குறித்து ராகுல் காந்தி வேண்டுமென்றே பொய்யைப் பரப்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் தனது எக்ஸ் பதிவில், “கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நான் அமெரிக்கா சென்றது குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வேண்டுமென்றே பொய்யைச் சொல்கிறார். நான் அமெரிக்க வெளியுறவு செயலாளரையும், ஜோ பைடன் நிர்வாகத்தின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரையும் சந்திக்கச் சென்றேன். அத்துடன், வெளியுறவுத் தூதர்களின் பொதுக் குழுக் கூட்டத்துக்கு தலைமை தாங்கவே அமெரிக்கா சென்றேன். நான் அங்கு தங்கியிருந்தபோது புதிதாக வரவிருக்கும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்னைச் சந்தித்தார்.
அந்தப் பயணத்தில், எந்தக் கட்டத்திலும் பிரதமருக்கான அழைப்பு குறித்து விவாதிக்கப்படவில்லை. இதுபோன்ற விழாக்களில் நமது பிரதமர் கலந்து கொள்வதில்லை என்று அனைவருக்கும் தெரியும். பொதுவாக இந்தியா தனது சிறப்புத் தூதர்களாலேயே பிரதிநித்துவப்படுகிறது. ராகுல் காந்தியின் பொய் அரசியல் உள்நோக்கம் கொண்டதாக இருக்கலாம். ஆனால், இது வெளிநாடுகளில் நமது நாட்டின் நற்பெயரை சேதப்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.
ராகுல் நாடாளுமன்றத்தில் பேசியது என்ன? – மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பதவியேற்பு விழாவுக்காக பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என்பதற்காக வெளியுறவுத் துறை அமைச்சர் பல முறை அமெரிக்கா சென்றார். அமெரிக்க அதிபரின் பதிவியேற்பு விழாவுக்கு நமது பிரதமரை அழைக்க வேண்டும் என்பதற்காக நாம் நமது வெளியுறவு அமைச்சரை இவ்வாறு பலமுறை அனுப்ப மாட்டோம். மாறாக, அமெரிக்க அதிபர் இங்கு வந்து நமது பிரதமரை அழைத்திருப்பார்” என்று பேசியிருந்தார்.
அப்போது, பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு கோஷமிட்டனர். அதன்பின், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசும்போது, “வெளியுறவு விவகாரம், ராணுவ விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் இப்படி பேசக் கூடாது” என்றார்.
சீனாவுடன் ஒப்பிட்டு பேச்சு: மக்களவையில் ராகுல் காந்தி மேலும் பேசும்போது, “மேக் இன் இந்தியா திட்டத்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. சீனா இந்த இடத்தில் இந்தியாவை விட குறைந்தது 10 வருடங்கள் முன்னிலையில் உள்ளது. சீனா கடந்த 10 ஆண்டுகளாக பேட்டரிகள், ரோபோக்கள், மோட்டார்கள் போன்ற துறைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. நாம் இந்தத் துறைகளில் பின்தங்கியுள்ளோம்.
உற்பத்தி துறையில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும். நம் நாட்டில் உற்பத்தி செய்யப்பட வேண்டிய பொருட்கள் சீனாவுக்கு சென்று விட்டன. நம் நாட்டில் உற்பத்தி செய்யப்பட வேண்டிய பொருட்கள் சீனாவில் உற்பத்தி செய்யப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. செல்போனின் அனைத்து பாகங்களும் சீனாவில் தயாரிக்கப்பட்டு, இந்தியாவில் அசெம்பிள் மட்டுமே செய்யப்படுகின்றன.
இந்தியாவில் நுகர்வோர் அதிகமாக உள்ளனர். ஆனால் உற்பத்தி முழுவதும் சீனாவிடம் உள்ளது. நமது நாடு, அதிவேகமாக பொருளாதாரத்தில் வளர்ந்து கொன்டிருக்கிறது. ஆனால், உலகம் முழுவதும் எதிர்கொள்கிற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பின்மை பிரச்சினையை நாமும் சந்திக்கிறோம்” என்று ராகுல் காந்தி பேசினார்.