மதுரை: திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில், 144 தடை உத்தரவை மீறி இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடுவதால் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க 1,500-க்கும் மேற்பட்ட போலீஸார் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் விசுவநாதர் கோயில், சிக்கந்தர் தர்கா உள்ளது. கோயில் மற்றும் தர்காவுக்கு பக்தர்கள், இஸ்லாமியர்கள், பொதுக்கள் சென்று வழிபாடு நடத்துவது வழக்கமாக உள்ளது. திருப்பரங்குன்றம் மலையிலுள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழிகளை பலியிட இஸ்லாமிய அமைப்புகள் திட்டமிட்ட நிலையில், இந்து முன்னணி போன்ற அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து இரு தரப்பிலும் மாறி, மாறி ஆர்ப்பாட்டம், போராட்டம் நடந்தது.
இதன் காரணமாக திருப்பரங்குன்றம் பகுதியில் வழக்கத்தைவிட பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. மலைக்கு செல்லும் இரு வழியிலும் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், மதுரை திருப்பரங்குன்றம் மலையை காப்போம் என்ற கோரிக்கையை முன்வைத்து நாளை (பிப்.4) இந்து முன்னணி உள்ளிட்ட சில இந்து அமைப்பினர் அறப்போராட்டத்துக்கு அழைப்பை விடுத்தனர்.
இதற்கு அனுமதி கேட்டு இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் காவல் துறையில் மனு கொடுத்தனர். ஆனாலும், திருப்பரங்குன்றத்தில் தெப்பத்திருவிழா நடப்பதாலும், போராட்டத்துக்கு அனுமதி கோரிய இடத்தில் மக்கள் அதிகளவில் கூடினால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படும். சட்டம், ஒழுங்கை கருத்தில் கொண்டு போலீஸ் அனுமதியை மறுத்து அறிக்கை வெளியிட்டது. உத்தரவை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீஸார் எச்சரித்துள்ளனர்.
இதனிடையே தடையை மீறி திருப்பரங்குன்றம் பகுதியில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடக்கும் என இந்து முன்னணியினர் கூறியதால் திருப்பரங்குன்றம் பகுதியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காவல் ஆணையர் மேற்பார்வையில் துணை ஆணையர்கள் இனிகோ தவ்யன், அனிதா, ராஜேஸ்வரி, வனிதா தலைமையில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர்.
இது குறித்து காவல் ஆணையர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை செய்தார். மலைக்கு செல்லும் பகுதியிலும், உச்சியிலும் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். நுழைவு வாயில், மலையிலும் தடுப்பு வேலிகள் அமைத்து பாதுகாப்பு தீவிரப்படுத்துள்ளது. தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக வெளியாகும் தகவலால் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா போன்ற இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் , தொண்டர்களின் வாகனங்கள், தங்குமிடங்களை காவல்துறையினர் காண்காணிக்கின்றனர்.
மதுரையில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் தேவையின்றி கூடினால் கைது செய்யவும் போலீஸார் தயார் நிலையில் இருப்பதாகவும், இதற்காக காவல்துறை வாகனங்களும், வஜ்ரா வாகனங்களும் திருப்பரங்குன்றம் கோயில் உள்ளிட்ட பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன.
காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் கூறுகையில், ‘மதுரையில் 144 தடை உத்தரவு உள்ளது. திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கோரி இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினரும் நீதிமன்றத்துக்கு சென்றுள்ளனர். நாளை வழக்கு விசாரணைக்கு வந்தாலும், சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்கும் விதமாக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளோம். அதிகாரிகள் தலைமையில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட போலீஸார் பணியில் ஈடுபடுகின்றனர். தடையை மீறும் பட்சத்தில் சட்டப்படி கைது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார்.