சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வாயிலாக இந்த ஆண்டு அரசு பணிகளில் எத்தனை காலியிடங்கள் நிரப்பப்படும் என்பது ஏப்ரல் மாதம் தெரியவரும் என்று தேர்வாணையத்தின் தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்தார்.
அரசு பணிகளில் சேர விரும்புவோரின் வசதிக்காக டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வு அட்டவணையை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்டது. அதில் குரூப்-1 தேர்வு, ஒருங்கிணைந்த குரூப்-2, 2ஏ தேர்வு, குரூப்-4 தேர்வு,தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு இல்லாதது) என மொத்தம் 7 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
வழக்கமாக வருடாந்திர தேர்வு அட்டவணையில், என்னென்ன தேர்வுகள், எத்தனை காலியிடங்கள் என்பன உள்ளிட்ட விவரங்களும் விரிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், 2025-ம் ஆண்டு தேர்வு அட்டவணையில் அதுபோன்று காலியிடங்கள் பற்றிய விவரம் இடம்பெறவில்லை.
மேலும், முன்பு தனித்தனி தேர்வாக நடத்தப்பட்டுவந்த பல தேர்வுகள் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வுகள் (நேர்காணல் உள்ளவை), ஒருங்கிணைந்த தொழில்நுட்பத்தேர்வுகள் (நேர்காணல் இல்லாதவை) என இரு பெரிய தேர்வுகளாக சுருக்கப்பட்டுள்ளன. தேர்வு அட்டவணையில் அந்த ஒருங்கிணைந்த தேர்வுகளில் என்னென்ன பதவிகளுக்கான தேர்வுகள் இருக்கும் என்பதும் அவற்றில் குறிப்பிடப்படவில்லை. இதனால், எத்தனை காலியிடங்கள் அறிவிக்கப்படும். எந்தெந்த பதவிகளுக்கு தேர்வுகள் நடத்தப்படும் என்பது தேர்வர்களுக்கு தெரியவில்லை.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகரிடம் கேட்டபோது, “தற்போதைய நிலையில் நடப்பு நிதி ஆண்டுக்கு (2024-2025) ஒதுக்கப்பட்ட அனைத்து காலியிடங்களுக்குமான போட்டித்தேர்வுகளும் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டன. எனவே, அடுத்த நிதி ஆண்டுக்கான காலியிடங்களின் விவரம் மார்ச் மாதத்துக்கு பிறகே அதாவது ஏப்ரலில்தான் தெரியவரும். தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியிடும்போது அதில் காலியிடங்கள் எண்ணிக்கையும் எந்தெந்த பதவிகள் என்பதும் இடம்பெறும்.
தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளின் முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடுவதற்கு முன்னுரிமை அளிக்கிறோம். கடந்த ஆண்டு அக்டோபரில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்பணிகளுக்கான தேர்வுகளின் (நேர்காணல் இல்லாதது) முடிவுகள் பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என அறிவித்திருந்தோம். அதன்படி, அத்தேர்வுகளின் முடிவுகள் அடுத்த வாரம் வெளியிடப்படும்” என்றார்.