அயர்லாந்தில் நடந்த கார் விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர்.
அயர்லாந்து நாட்டின் கார்லோவ் நகருக்கு அருகில் உள்ள கிரேகுவெனாஸ்பிடோகே என்ற இடத்தில் கருப்பு நிற ஆடி ஏ6 ரக கார் கடந்த வெள்ளிக்கிழமை, மரத்தில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் காரில் பயணித்த செருகுரி சுரேஷ் சவுத்ரி, பார்கவ் சித்தூரி ஆகிய 2 இந்திய மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக அயர்லாந்து நாட்டின் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அயர்லாந்து தலைநகர் டப்ளினில் உள்ள இந்திய தூதரகம் சமூகவலைதளத்தில் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும், அவர்களது குடும்பத்தாருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவதாகவும் இந்தியத் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அயர்லாந்து பிரதமர் மைக்கேல் மார்ட்டின், கார்க்கில் ஒரு கூட்டத்தில் உரையாற்றும் போது, ‘விபத்தில் 2 இந்தியர்கள் உயிரிழந்த செய்தியைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்தேன்’ என்று தெரிவித்துள்ளார்.
இவர்கள் கார்லோவ் நகரில் ஒன்றாக வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளனர். பாதிக்கப்பட்ட 4 பேரும் கார்லோவில் உள்ள சவுத் ஈஸ்ட் டெக்னாலஜிக்கல் பல்கலைக்கழகத்தின் (எஸ்இடியு) முன்னாள் மாணவர்கள் ஆவர். இவர்களில் ஒருவர் மருந்துக் கடையில் பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.