குடியரசுத் தலைவரை விமர்சிக்கும் வகையில் கருத்து தெரிவித்தாக கூறி பாஜக எம்.பி.க்கள் நேற்று நாடாளுமன்றத்தில் சோனியா காந்தி்க்கு எதிராக உரிமை மீறல் தீர்மானத்தை கொண்டுவந்தனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்நாளான ஜனவரி 31-ம் தேதி நடைபெற்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். அப்போது மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் இலக்குகள் குறித்து அவர் எடுத்துரைத்தார். நாடாளுமன்றத்துக்கு வெளியே அவரின் உரை குறித்து சோனியா காந்தியிடம் கருத்து கேட்டபோது” உரையின் இறுதியில் குடியரசுத் தலைவர் மிகவும் சோர்வடைந்து விட்டார். அவரால் பேச முடியவில்லை. பாவம்” என்று தெரிவித்தார்.
அவரின் இந்த கருத்து குடியரசுத் தலைவரின் கண்ணியத்தை களங்கப்படுத்தும் வகையில் இருந்ததாக குடியரசுத் தலைவர் மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. மேலும், குடியரசுத் தலைவரை அவமானப்படுத்தும் வகையில் பேசிய சோனியா, ராகுல், பிரியங்கா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிடக்கோரி முசாபர்பூர் நகரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு பிப்ரவரி 10-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சோனியா காந்திக்கு எதிராக நேற்று நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி.க்கள் உரிமை மீறல் தீர்மானத்தை கொண்டு வந்தனர்.