சென்னை: தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த விவகாரம் தொடர்பாக சென்னை, மன்னார்குடி உட்பட தமிழகத்தில் 6 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தியாவில் ஹிஸ்ப்-உத்-தஹ்ரிர் என்ற பயங்கரவாத அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புக்கு ஆதரவாக சிலர் செயல்பட்டு வருவதாகவும், இளைஞர்களை மூளைச் சலவை செய்து இந்த இயக்கத்தில் சேர்க்க முயற்சி நடந்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் இதுதொடர்பாக என்ஐஏ ஏற்கெனவே ஒருமுறை சோதனை நடத்தியுள்ளது.
இந்நிலையில், 2-வது முறையாக தமிழகத்தில் நேற்றும் என்ஐஏ தீவிர சோதனை நடத்தியது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஆசாத் தெருவை சேர்ந்த மன்னை பாவா என்ற பாவா பக்ருதீன் (44) வீட்டில் சோதனை நடைபெற்றது. சென்னையில் இருந்து வந்த என்ஐஏ அதிகாரிகள் நேற்று அதிகாலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 5 மணி நேர சோதனைக்கு பிறகு, பாவா பக்ருதீனை அதிகாரிகள் கைது செய்து அழைத்துச் சென்றனர். அவரது செல்போன், பென்ட்ரைவ், வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவரது வீட்டில் ஏற்கெனவே கடந்த 2021-ம் ஆண்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த முடிச்சூர் இபி காலனி பகுதியில் வசிக்கும் கபீர் அகமது (50) என்பவரது வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். இவரது வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் கடந்த 2024-ம் ஆண்டும் சோதனை நடத்தினர். அப்போது, வீட்டில் அவர் இல்லை. சிம்கார்டு, புத்தகம் மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி சென்றனர்.
இந்நிலையில், மண்ணிவாக்கம் விரிவு, ராஜாத்தி கலைஞர் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கபீர் அகமது இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து, அந்த வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று காலை சோதனை நடத்தினர். அங்கிருந்த கபீர் அகமதுவை கைது செய்து, சென்னையில் உள்ள என்ஐஏ தலைமை அலுவ
லகத்துக்கு அழைத்து சென்றனர்.
சென்னை, மன்னார்குடி தவிர தமிழகத்தில் மேலும் 4 இடங்களிலும் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தி, டிஜிட்டல் ஆவணம் உட்பட பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆள்சேர்க்கும் நடவடிக்கையில் யாரேனும் ஈடுபட்டுள்ளனரா என கண்காணித்து வருவதாக என்ஐஏ தரப்பில் கூறப்பட்டது.