சீனா இந்தியாவை விட குறைந்தது 10 வருடங்கள் முன்னிலையில் உள்ளது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சீனா கடந்த 10 ஆண்டுகளாக பேட்டரிகள், ரோபோக்கள், மோட்டார்கள் போன்ற துறைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. நாம் இந்தத் துறைகளில் பின்தங்கியுள்ளோம் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் குற்றம்சாட்டினார்.

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று தொடங்கியது. இந்த விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசியதாவது: இந்தியாவில் தயாரிப்போம் என்ற பெயரிலான மேக் இன் இந்தியா திட்டத்தைப் பிரதமர் மோடி கொண்டு வந்தார். அது நல்ல யோசனை என்று நினைக்கிறேன். ஆனால், 2014-ல் 15.3% ஆக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி, இன்று 12.6% ஆகக் குறைந்துள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் உற்பத்தியில் இது தான் மிக குறைவானதாகும். இதற்காக நான் பிரதமரைக் குறை கூறவில்லை, அவர் முயற்சிக்கவில்லை என்று கூறுவது நியாயமாக இருக்காது. பிரதமர் முயற்சி செய்தார். ஆனால் அவர் தோல்வியடைந்தார் என்று என்னால் கூற முடியும். இந்தியாவில் தயாரிப்போம் (மேக் இன் இந்தியா) திட்டத்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.

சீனா இந்த இடத்தில் இந்தியாவை விட குறைந்தது 10 வருடங்கள் முன்னிலையில் உள்ளது. சீனா கடந்த 10 ஆண்டுகளாக பேட்டரிகள், ரோபோக்கள், மோட்டார்கள் போன்ற துறைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. நாம் இந்தத் துறைகளில் பின்தங்கியுள்ளோம்.

உற்பத்தி துறையில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும். நம் நாட்டில் உற்பத்தி செய்யப்பட வேண்டிய பொருட்கள் சீனாவுக்கு சென்று விட்டன. நம் நாட்டில் உற்பத்தி செய்யப்பட வேண்டிய பொருட்கள் சீனாவில் உற்பத்தி செய்யப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. செல்போனின் அனைத்து பாகங்களும் சீனாவில் தயாரிக்கப்பட்டு, இந்தியாவில் அசெம்பிள் மட்டுமே செய்யப்படுகின்றன. இந்தியாவில் நுகர்வோர் அதிகமாக உள்ளனர். ஆனால் உற்பத்தி முழுதும் சீனாவிடம் உள்ளது.

நமது நாடு, அதிவேகமாக பொருளாதாரத்தில் வளர்ந்து கொன்டிருக்கிறது. ஆனால், உலகம் முழுவதும் எதிர்கொள்கிற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பின்மை பிரச்சினையை நாமும் சந்திக்கிறோம். முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாகட்டும்(காங்கிரஸ் தலைமையிலான அரசு). தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாகட்டும் வேலைவாய்ப்பின்மை தொடர்பாக இந்த நாட்டு இளைஞர்களுக்கு தெள்ளத் தெளிவான பதில் எதையுமே தரவில்லை.

மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் 400 இடங்களைக் கைப்பற்றுவோம். அரசியல் சாசனத்தை திருத்தி எழுதுவோம் என பாஜக தலைவர்கள் கூறிக் கொண்டிருந்தனர். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்றத்துக்குள் நுழையும் போது அரசியல் சாசனத்தை குனிந்து தலைவணங்கியதைப் பார்த்து மகிழ்ந்தேன். அப்போது எங்களுக்கு பெருமிதமாக இருந்தது. அரசியல் சாசனத்தை எந்த ஒரு சக்தியுமே அசைத்துப் பார்க்க முடியாது என்பதை நாட்டு மக்களும் காங்கிரஸும் பிரதமர் மோடிக்கு விளக்கமாக சொல்லிவிட்டதை உணர முடிந்தது. உங்களால் அரசியல் சாசனத்தை ஒரு போதும் திருத்திவிட முடியும் என கனவிலும் நினைக்க முடியாது.

இந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது என்பதை பிரதமர் மோடி மறுக்கிறார். ஆனால், பிரதமரின் கூற்றை ஏற்காத ராணுவம், 4000 சதுர கிலோமீட்டர் பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாக கூறுகிறது. இதை ராணுவ தளபதியே தெரிவித்துள்ளார்.

இந்தியாவும் உற்பத்தி, தொழில்நுட்பத்தில் முன்னேறி இருந்தால், அமெரிக்க அதிபரின் பதிவியேற்பு விழாவுக்கு நமது பிரதமரை அழைக்க வேண்டும் என்பதற்காக நாம் நமது வெளியுறவு அமைச்சரை அனுப்ப மாட்டோம். மாறாக அமெரிக்க அதிபர் இங்கு வந்து நமது பிரதமரை அழைத்திருப்பார்.இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

அப்போது, ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசும்போது, “வெளியுறவு விவகாரம், ராணுவ விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் இப்படி பேசக் கூடாது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.